×

இயல்பு நிலைக்கு திரும்பிய புதுச்சேரி: சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா தாக்கம் மிகவும் குறைந்து வரும் நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. இதனால் புதுச்சேரி மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. புதுச்சேரியில் முதல் அலை கொரோனா பரவல் தொடக்கத்தில் மிகவும் குறைவாக இருந்தது. பின்னர் தொற்று பரவல் அதிகரித்தது. சில நாட்களில் தொற்று பாதிப்பு எதுவும் இல்லாமல் இருந்தது. இதனிடையே கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் கொரோனாவின் 2வது அலை டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் கோரத்தாண்டவம் ஆடியது. இது மெல்ல மெல்ல புதுச்சேரிக்கும் பரவியது. இதனால் அந்த காலகட்டங்களில் தினசரி தொற்று பரவலின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது.

இதனால் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடைகள், அலுவலகங்கள், சுற்றுலா தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டது. இந்நிலையில் கடந்த மாதம் முதல் கொரோனாவின் 2வது அலை கட்டுக்குள் வர தொடங்கியது. இதனால் ஊரடங்கில் மெல்ல மெல்ல தளர்வுகள் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கடைகள், வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டன. அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இயங்க தொடங்கின. அதன்பின்னர் கடற்கரை சாலை திறக்கப்பட்டு பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. பூங்காக்கள், நோணாங்குப்பம் படகு குழாம் என அனைத்தும் இயங்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனால் தற்போது புதுச்சேரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுக்க தொடங்கியுள்ளனர். இந்தியாவின் பல்வேறு பகுதி மக்கள் தற்போது புதுச்சேரிக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவ்வாறு வருபவர்கள் கடற்கரை, பாரதி பூங்கா, மியூசியம், நோணாங்குப்பம் படகு குழாம் என பல இடங்களுக்கு சென்று மகிழ்ச்சியாக பொழுதை கழிக்கின்றனர். விடுமுறை தினமான நேற்று வழக்கத்தை விட ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு வந்திருந்தனர். இதனால் கொரோனாவால் முடங்கி கிடந்த புதுச்சேரி தற்போது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளது.

Tags : Novatcheri , Pondicherry returns to normal: Tourist arrivals increase
× RELATED நாளை மறுநாள் உள்ளாட்சி தேர்தல் மனு...