பெகாசஸ் ஒட்டுக்கேட்பு குறித்து விசாரிக்க ஓய்வுப்பெற்ற நீதிபதிகள் தலைமையில் சிறப்பு குழு!: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி..!!

கொல்கத்தா: முக்கிய பிரமுகர்களின் செல்போன்கள் ஒட்டுகேட்கப்பட்டது குறித்து விசாரணை செய்ய மேற்குவங்க அரசு சிறப்பு குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது. இஸ்ரேலிய உளவு செயலியான பெகாசஸ் மூலமாக இந்தியாவில் உள்ள முக்கிய பிரமுகர்களின் செல்போன்கள் ஒட்டுகேட்கப்பட்டது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விவாதம் நடத்த வலியுறுத்தி நாடாளுமன்ற அலுவல்களை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முடக்கி வருகின்றனர். இந்நிலையில் பெகாசஸ் செயலி மூலம் மேற்குவங்கத்தில் உளவு பார்க்கப்பட்டது குறித்து விசாரிக்க அம்மாநில அரசு சிறப்பு விசாரணை குழுவை அமைத்துள்ளது.

ஹௌராவில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி, எம்.வி.லோகூர், ஜோதிர்மாயி பட்டச்சாரியா ஆகிய ஓய்வுப்பெற்ற நீதிபதிகள் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். இதுகுறித்து மம்தா பேசியதாவது, செல்போன் உளவு குறித்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி  எம்.வி.லோகூர் மற்றும் ஓய்வு பெற்ற கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி  ஜோதிர்மாயி பட்டச்சாரியா ஆகியோர் தலைமையிலான குழு விசாரணை நடத்தும். விசாரணை சட்டம் 1952ன் பிரிவு 3ன் கீழ் இந்த விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையிலான குழு, மேற்கு வங்கத்தில் உளவு செயலி மூலம் முக்கிய நபர்களின் போன்கள் ஒட்டு கேட்கப்பட்டது குறித்து விரைவில் விசாரணை செய்யும் என்று குறிப்பிட்டார். பெகாசஸ் செயலியை பயன்படுத்தி உளவு பார்க்கப்பட்டவர்களின் பட்டியலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. அபிஷேக் பானர்ஜி மற்றும் அவரது உறவினர் ஒருவரது பெயர்கள் சமீபத்தில் இடம் பெற்றிருந்தன. இதையடுத்தே தொலைபேசி ஒட்டுக்கேட்பு குறித்து விசாரணை செய்ய ஓய்வுபெற்ற நீதிபதிகளின் தலைமையில் சிறப்பு குழுவை மேற்கு வங்க அரசு ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

More
>