×

“மாநில வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களை முறையாக வகுத்து கண்காணிக்க வேண்டும்” - திட்டம் மற்றும் வளர்ச்சி துறையின் ஆய்வுக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: மாநில வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களை முறையாக வகுத்து கண்காணிக்க வேண்டும்” திட்டம் மற்றும் வளர்ச்சி துறையின் ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (26.07.2021) தலைமைச் செயலகத்தில், திட்டம் மற்றும் வளர்ச்சி துறையின் பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில், இத்துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள துறைகளான, பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறை, மாநில வளர்ச்சி கொள்கை குழு, மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சி துறை ஆகிய துறைகளின் செயல்பாடுகள் குறித்து  விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையின் முக்கிய திட்டங்களான, சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டம் மற்றும் தமிழ்நாடு புத்தாக்க முயற்சிகள் திட்டம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்தும், பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறையால் மேற்கொள்ளப்படும் வேளாண், பொருளாதார கணக்கெடுப்புகள் குறித்தும், பயிர் காப்பீட்டுத் திட்டத்தில், பயிர் அறுவடைகளின் சராசரி கணக்கெடுப்பு பற்றிய  புள்ளிவிவரங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். இக்கூட்டத்தில், மாநிலத்தில் உள்ள அனைத்து ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்வாதாரம்  மேம்படவும், விவசாயிகளுக்கு நலன் அளிக்கும் வகையிலும், தொழில் வளர்ச்சி சிறக்கவும், முறையான திட்டங்களை வகுத்து, அவற்றின் செயல்பாட்டினை கண்காணிக்க வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.

அரசின் நிதி ஒதுக்கீடுகள் அதிகபட்ச மக்களுக்கு சென்றடையும் வகையில் திட்டங்களை தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுத்த வேண்டும் என்றும்,  திட்டங்களை வகுக்கையில் பல்வேறு துறை வல்லுநர்களையும், செயற்பாட்டாளர்களையும் கலந்தாலோசித்து அவர்கள் கருத்தினை பெற்று திட்டங்களை இறுதி செய்வது, மேலும் சிறப்பான பயன்களை  அளிக்கும் என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார். மாநிலத்திற்கான பிரத்யேகமாக நிகழ்தரவு ஒன்றினை நிறுவுமாறும், மாநிலத்தின் முன்னேற்றத்திற்கான தொலைநோக்குத் திட்டங்கள் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை வரையறுக்கப்பட்டு ஒவ்வொரு ஐந்தாண்டுகளில் ஆண்டுதோறும் ஏற்படும் நிகழ் மாற்றங்களுக்கேற்ப வடிவமைக்கப்பட வேண்டும் எனவும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாண்புமிகு கூட்டுறவு துறை அமைச்சர் திரு.ஐ.பெரியசாமி, மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் துணைத் தலைவர் பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன், தலைமைச் செயலாளர்  முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப.,  நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.ச.கிருஷ்ணன், இ.ஆ.ப., திட்டம் மற்றும் வளர்ச்சி துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.விக்ரம் கபூர், இ.ஆ.ப.,  பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறையின் ஆணையர் முனைவர் கருணாகரன், இ.ஆ.ப., மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் உறுப்பினர் செயலர் திரு.பாஸ்கரபாண்டியன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : MK Stalin ,Department of Planning and Development , 'Proper planning and monitoring of projects required for the development of the state' - MK Stalin's instruction at the review meeting of the Department of Planning and Development
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...