முதல் டி20 போட்டியில் 38 ரன் வித்தியாசத்தில் வெற்றி; சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்வதை ரசிக்கிறோம்: கேப்டன் தவான் பேட்டி

கொழும்பு: இந்தியா-இலங்கை அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி கொழும்பில் நேற்று இரவு நடந்தது. டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 50 (34 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), ஷிகர் தவான் 46 (36 பந்து), சஞ்சு சாம்சன் 27, இஷான் கிஷன் 20 ரன்கள் எடுத்தனர். பின்னர் களம் இறங்கிய இலங்கை, 18.3 ஓவர்களில் 126 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இப்போட்டியில் இந்தியா 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கை அணியில் அதிகபட்சமாக அசலங்கா 44 (26 பந்து), அவிஷ்கா பெர்னாண்டோ 26 ரன் எடுத்தனர். இந்திய பந்து வீச்சில் புவனேஸ்வர்குமார் 4 விக்கெட் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார். தீபக் சாகர் 2 விக்கெட் வீழ்த்தினார். 2வது டி20 போட்டி நாளை நடக்கிறது. வெற்றிக்கு பின் கேப்டன் தவான் கூறுகையில், ‘‘10, 15 ரன்கள் குறைவாக இருப்பதாக நினைத்தேன், ஆனால் இது நல்ல ஸ்கோர்தான். முதல் பந்தில் விக்கெட்டை இழந்த பிறகு, நாங்கள் நன்றாக விளையாடினோம். பவர் பிளேயில் 50 ரன்களை குவித்தோம். சூர்யா ஒரு சிறந்த வீரர், அவரது பேட்டிங்கை நாங்கள் ரசிக்கிறோம். இலங்கை வீரர்களும் சிறப்பாக விளையாடினர்.

ஆனால்  சுழற்பந்து வீச்சாளர்களுக்கு கொஞ்சம் திருப்பம் கிடைக்கும் என்று எங்களுக்கு தெரியும். சஹால், புவி மற்றும் குர்ணால் நன்றாக பந்து வீசினர். வருண் கூட சிறப்பாக பந்து வீசினார்’’, என்றார். இலங்கை கேப்டன் தாசுன் ஷனகா கூறுகையில், சேசிங் செய்யக்கூடிய இலக்குதான். ஆனால் இந்திய பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்தினர். ஆட்டத்தை முடிக்க போதுமான மிடில் ஆர்டர் வீரர்கள் எங்களிடம் இல்லை. எங்கள் பந்துவீச்சு அற்புதம் என நினைக்கிறேன். அடுத்த ஆட்டத்தில் சிறப்பாக செய்வோம் என்று நம்புகிறேன்’’, என்றார்.

Related Stories: