×

கொளத்தூர் தொகுதியில் புத்துணர்வு பெறும் புறநகர் மருத்துவமனை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

பெரம்பூர்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பெரியார் நகர் புறநகர் மருத்துவமனை புத்துணர்வு பெற்று வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர். முற்றிலும் சீரமைக்கப்பட்ட இந்த புறநகர் மருத்துவமனையை விரைவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கிறார்.  சென்னையில் மருத்துவக் கல்வி இயக்குநர் கட்டுப்பாட்டில் அண்ணாநகர், கே.கே.நகர், தண்டையார்பேட்டை மற்றும் பெரியார் நகர் என 4 பகுதிகளில் புறநகர் மருத்துவமனைகள் தோன்றின. இவை ஒவ்வொன்றும் அப்பகுதி பெரிய மருத்துவமனையின் துணை மருத்துவமனையாக இணைக்கப்பட்டது.

அதன்படி, சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையுடன் பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனை கடந்த 1986ல் இணைக்கப்பட்டது.  காலப்போக்கில், கே.கே.நகர் புறநகர் மருத்துவமனையில் எலும்பு சம்பந்தப்பட்ட பிரிவும், அண்ணாநகர் மருத்துவமனையில் இரைப்பை நோய்கள் பிரிவும் சிறப்பு பிரிவுகளாக சேர்க்கப்பட்டன. ஆனால், பெரியார் நகர் புறநகர் மருத்துவமனையில் எந்த சிறப்பு பிரிவுகளும் ஆரம்பிக்கப்படவில்லை. எனினும், 2 அறுவை சிகிச்சை அறைகள் மற்றும் 14 மருத்துவர்களோடு சிறப்பாகவே இயங்கியது. காலப்போக்கில் இம்மருத்துவமனையில் கட்டிட பராமரிப்பு சரிவர பேணப்படாமல் ஆர்எம்ஓ, செவிலியர் மற்றும் இதர பணியாளர்கள் விடுதி படிப்படியாக சேதமடைந்து, முழுவதுமாக இடிக்கப்பட்டுவிட்டன.

கடந்த 2011ம் ஆண்டு, பொது மற்றும் ஊரக மருத்துவ பணிகள் இயக்குனர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு திருவள்ளூர் மருத்துவ இணை இயக்குனர் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு செல்லப்பட்டது.இதையடுத்து, இம்மருத்துவமனையை மீண்டும் சென்னை மருத்துவ கல்வி இயக்குனர் கட்டுப்பாட்டில், பொது மருத்துவமனையின்கீழ் கொண்டுவர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலமுறை வலியுறுத்தினர். இதற்கு அப்போதைய மற்றும் தற்போதைய சுகாதாரதுறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் உரிய நடவடிக்கை எடுத்தார். இதன் விளைவாக, மீண்டும் 2015-ம் ஆண்டு மருத்துவக்கல்வி இயக்குனர் கட்டுப்பாட்டின்கீழ் மீண்டும் இம்மருத்துவமனை கொண்டுவரப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இம்மருத்துவமனை 100 படுக்கைகளோடு உள்நோயாளிகளுக்கும் சுமார் 800-க்கும் மேற்பட்ட புறநோயாளிகளுக்கும் சேவை புரிந்தது. கொரோனா காலக்கட்டத்தில் 100 உள்நோயாளிகளுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. திமுக அரசு பொறுப்பேற்றதும், தமிழக முதல்வரும் கொளத்தூர் தொகுதி எம்எல்ஏவுமான மு.க.ஸ்டாலின், சுகாதார மருத்துவப்பணிகள் துறை, இந்து சமய அறநிலைய துறை அமைச்சர்கள் வந்து இம்மருத்துவமனையை பார்வையிட்டனர். நான்கு தளங்கள் கொண்ட இம்மருத்துவமனை 12 கோடி ரூபாய் செலவில், கிட்டத்தட்ட முற்றிலும் புதுப்பிக்கப்பட்டது. தற்போது 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு மீண்டும் செயல்பட உள்ளது.

இம்மருத்துவமனையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மிக விரைவில் திறந்து வைக்கிறார்.இம்மருத்துவமனையின் பின்புறத்தில் காலியாக உள்ள இடத்தில், 4 தளங்கள் கொண்ட புதிய கட்டிடமும் அதில் பல்வேறு சிறப்பு பிரிவுகளும் கொண்டுவர உத்தேசித்திருப்பதாக கூறப்படுகிறது. முத்தமிழ் அறிஞர் கலைஞரால் பெரியார் நகர் என்று பெயர் சூட்டப்பட்ட இந்நகரில், இந்த மருத்துவமனை கொளத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள  மக்களின் பல்வேறு அத்தியாவசிய மருத்துவ தேவைகளை நிைறவேற்றும் என்பதே நிதர்சனமான உண்மை. 


Tags : Kolatur ,Q. ,Stalin , Rejuvenating Suburban Hospital in Kolathur: Chief Minister MK Stalin opens
× RELATED சாசனத்தின் உணர்வை நிலைநாட்டி...