×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் போதை பொருட்கள் கடத்தியதாக 52 பேரை பிடித்து சிறையில் அடைப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் போதை பொருட்கள் கடத்தியதாக இதுவரை 52 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர். காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதை பொருட்கள் விற்பனை சமீபகாலமாக அதிகரித்துவந்தது. போதைக்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள் அடிமையானதால் போதை பொருட்கள் விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பொதுமக்களும் சமூகநல ஆர்வலர்களுக்கு தொடர்ந்து வலியுறுத்திவந்தனர். இதையடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கஞ்சா விற்பனை கும்பலை தேடி வந்தனர்.

இந்த நிலையில், காஞ்சிபுரம் சரகம் காவல் துணைத் தலைவர் சத்யபிரியா உத்தரவின்படி, காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எம்.சுதாகர் தலைமையில் போலீசார் காஞ்சிபுரம், பெரும்புதூர் உள்பட பல பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது அந்த கடைகளில் விற்பனைக்காக வைத்திருந்த 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான குட்கா போதை பொருட்களை  பறிமுதல் செய்தனர். மாவட்டத்தில் குட்கா கடத்தல் சம்பந்தமாக இதுவரை 52 பேரை கைது செய்தனர்.

போலீசார் கூறுகையில்,’’காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு போதை பொருட்கள் விற்பனை தடுத்து நிறுத்தப்படும். கஞ்சா விற்பனையில் ஈடுபடுகின்ற நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்’ என்றனர்.



Tags : Kanchipuram district , 52 arrested for drug trafficking in Kanchipuram district
× RELATED காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோடை...