×

தமிழ்நாடு அரசின் தீவிர நடவடிக்கையால் டெங்கு நோய் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது!: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்..!!

சென்னை: தமிழ்நாடு அரசின் தீவிர நடவடிக்கையால் டெங்கு நோய் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் டெங்கு பரவலை கட்டுப்படுத்த கோரி வழக்கறிஞர் சூரியப்பிரகாசம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2019ம் ஆண்டு பொதுநல வழக்கு ஒன்றினை தொடர்ந்திருந்தார். மனுவில், சென்னையில் நடைபாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கக்கூடிய வாகனங்களினால் டெங்கு பரவுவதால் அந்த வாகனங்களை அப்புறப்படுத்த சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அச்சமயம் தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், டெங்கு பரவலை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும், டெங்கு மற்றும் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் 2715 தற்காலிக சுகாதார ஆய்வாளர் நியமிக்கப்பட்டு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டினார். கடந்த ஜனவரி மாதம் மாநிலத்தில் 402 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்ட நிலையில் ஜூன் மாதங்களில் பாதிப்பு என்பது 52 என்று பெருமளவில் குறைந்துள்ளதாகவும் கூறினார்.

தொடர்ந்து புகை போடுதல், கொசு ஒழிப்புக்கு மருந்து தெளித்தல் போன்ற பல்வேறு நோய் தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் இதேபோன்று சென்னை மாநகராட்சி சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மொத்தம் 52 பேர் மட்டுமே டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை நீதிபதிகள் 4 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.


Tags : Government of Tamil Nadu ,
× RELATED பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி...