கொலை முயற்சி வழக்கில் அதிமுக மாஜி எம்எல்ஏ மீது நடவடிக்கை: சமூக செயற்பாட்டாளர் வலியுறுத்தல்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த ஒரு கொலை வழக்கு தொடர்பாக சமூக செயற்பாட்டாளர் சங்கமித்திரன் போராட்டம் நடத்தினார். இதன் எதிரொலியாக சங்கமித்திரனை கொலை செய்ய முயற்சிக்கப்பட்டது. இதுதொடர்பாக சங்கமித்திரன் அப்போது அளித்த புகாரில் முன்னாள் எம்எல்ஏ பவுன்ராஜ் உள்பட 10 மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அப்போது பவுன்ராஜ் எம்எல்ஏவாக இருந்ததால் கல்லூரியில் நடந்த கொலை முயற்சி வழக்கு கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் அதன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி  சமூக செயற்பாட்டாளர் சங்கமித்திரன் மயிலாடுதுறை எஸ்பி சுகுணாசிங்கிடம் நேற்று ஒரு புகார் மனு அளித்தார்.

அதில், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து களப்பணியாற்றி வரும் என்னை, கொலை செய்ய முயற்சித்தது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டபோதும், அப்போது ஆளுங்கட்சி எம்எல்ஏவாக இருந்த பவுன்ராஜ் தடுத்ததால், வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது. எனவே தற்போது இவற்றை விசாரித்து பவுன்ராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவை பெற்ற எஸ்பி சுகுணாசிங், இதுகுறித்து உடனடியாக விசாரணை நடத்த உத்தரவிடப்படும் என்றார். மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளரான பவுன்ராஜ் பூம்புகார் தொகுதியில் 2 முறை எம்எல்ஏவாக இருந்தார்.

3வது முறையாக கடந்த சட்டசபை தேர்தலில் பூம்புகார் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். ஏற்கனவே பவுன்ராஜ் மீது எடக்குடி ஊராட்சி தலைவர் தங்கமணி தனக்கு பவுன்ராஜ் கொலை மிரட்டல் விடுப்பதாக பெரம்பூர் போலீசில் புகார் அளித்தார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து தரங்கம்பாடி மாவட்ட உரிமை மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் பவுன்ராஜ் மீது வழக்கு பதிந்து விசாரித்து புலனாகும் பட்சத்தில் அதனை விசாரித்து தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: