×

கரூர் மாவட்டத்தில் சாலை விபத்தை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை-கலெக்டர் ஆய்வு

கரூர் : கரூர் மாவட்டத்தில் மதுரை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ள பெரிச்சிபாளையம் பிரிவு, செம்மடை, பெரியார் வளைவு, திருக்காம்புலியூர், மணல் மேடு, ஜவுளிப்பூங்கா, மண்மங்கலம், தவிட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் விபத்துக்களை தடுப்பதற்கு எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் பிரபுசங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த குறிப்பிட்ட பகுதிகளில் பெரிச்சிபாளையம் மற்றும் பெரியார் வளைவு ஆகிய பகுதிகளில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்ட கலெக்டர், இதர பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலையில் இணையும் அணுகு சாலைகளில் வேகத்தடைகள் அமைக்கவும், இரவு நேரங்களில் வேகத்தடை தெரியும் அளவில் எதிரொளிப்பான்கள் அமைக்கவும், தேசிய நெடுஞ்சாலை பகுதி உள்ளதென்றும், வேகத்தடை உள்ளது எனவும் வாகன ஓட்டிகள் மெதுவாக செல்ல வேண்டும் என்பதை விளக்கும் வகையிலான செய்திகள் அடங்கிய பதாதைகள் வைக்கவும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தவிட்டுப்பாளையம் பகுதியில் மேம்பாலம் கட்டுவதற்காக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது என்றும், இன்னும் ஒரு மாத காலத்திற்குள் பணிகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மீதமுள்ள பகுதிகளில் விபத்துக்களை தடுக்கும் வகையில் சாலையில் இரவு நேரங்களில் ஒளிரக்கூடிய எதிரொலிப்பான்கள் அமைத்து வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றும், அணுகு சாலைகளில் வேகத்தடைகள் அமைத்து உரிய விளக்க பலகைகள் அமைக்க நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் எனவும் தேசிய நெடுஞ்சாலைத்துறையின் திட்ட மேலாளர்கள் தெரிவித்தனர்.

இந்த ஆய்வின்போது, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட அமலாக்கப்பிரிவு மேலாளர் முருகபிரகாஷ், துணை பொறியாளர் வேல்முருகன், கட்டுமான மேலாளர் கிருஷ்ணாரெட்டி உட்பட அனைத்து அதிகாரிகளும் உடனிருந்தனர்.

Tags : Karur district , Karur: Accidents have been identified on the Madurai-Saleem National Highway in Karur district
× RELATED அவரை சாகுபடியில் அதிக மகசூல் பெறும் வழிமுறை