×

அத்திக்கடவு அவினாசி திட்டத்தில் விடுபட்ட 3 குளங்களை சேர்த்து குழாய் பதிக்கும் பணிகள் தீவிரம்

சத்தியமங்கலம் : அத்திக்கடவு அவினாசி திட்டத்தில் விடுபட்ட மூன்று குளங்கள் சேர்க்கப்பட்டு தற்போது குழாய் பதிக்கும் பணிகள் நடந்து வருவதால் புஞ்சை புளியம்பட்டி சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.அத்திக்கடவு அவினாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தின் கீழ் பவானி ஆற்றில் உபரியாக வரும் தண்ணீரை ஈரோடு மாவட்டம் காளிங்கராயன் அணைக்கட்டு அருகே தேக்கி மின்மோட்டார் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள குளம் குட்டைகளில் தண்ணீரை நிரப்பி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக ரூ.1626 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இத்திட்டத்தில் நீரேற்று நிலையம் மற்றும் குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது.

மின்மோட்டார் மூலம் நீரேற்றம் செய்து குளங்கள் மற்றும் குட்டைகளை இணைக்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புஞ்சைபுளியம்பட்டி பகுதியிலுள்ள நல்லூர் குளம், புங்கம்பள்ளி குளம், காவிலிபாளையம் குளம் சேர்க்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து அப்பகுதி விவசாயிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று தற்போது விடுபட்ட மூன்று குளங்களும் அத்திக்கடவு அவினாசி திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. தற்போது வரப்பாளையம் பகுதியில் பைப் லைன்கள் பதிப்பதற்காக ராட்சத குழாய்கள் லாரிகளில் கொண்டு வந்து இறக்கி வைக்கப்பட்டு தற்போது குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

காவிலிபாளையம், காராப்பாடி ஊராட்சியில் உள்ள மாரம்பாளையம் பகுதியில் இருந்து நல்லூர் குளத்தை பைப் லைன் மூலம் இணைக்கப்பட உள்ளதாகவும், இதன் மூலம் நல்லூர் மற்றும் புங்கம்பள்ளி சுற்றுவட்டாரங்களில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பயன் பெற வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Athikkadavu Avinashi , Sathiyamangalam: Three missing ponds have been added to the Athikkadavu Avinashi project and pipe laying work is underway.
× RELATED அத்திக்கடவு-அவிநாசி திட்டத்திற்கு நீரேற்று நிலையம் அமைக்கும் பணி