கமுதி வட்டாரத்தில் கோடை உழவு பணிகள் ஆய்வு

கமுதி : கமுதி வட்டாரத்தில் தமிழ்நாடு நிலைத்தக்க மானாவாரி மேம்பாட்டு இயக்கம் சார்பில் கோடை உழவு குறித்து விவசாய நிலங்களை வேளாண்மைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

கமுதி தாலுகாவில் சோளம், கம்பு, உளுந்து பயிரிடும் விவசாயிகளுக்கு மானியம் அளிக்க 700 ஹெக்டர் இலக்கு வேளாண்மைத் துறைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் கோடை உழவு பணிக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.500 மற்றும் விதைகள் மற்றும் உயிர் உரங்கள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது. இது தொடர்பாக தற்போது பயனாளிகள் தேர்வு செய்து உதவி வேளாண்மை அலுவலர்கள் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் எம்.எம்.கோட்டை கிராமத்தில் தமிழ்நாடு நிலைத்தக்க மானாவாரி மேம்பாட்டு இயக்கம் திட்டத்தில் கோடை உழவு நடைபெற்று வருவதை வேளாண்மை துணை இயக்குநர் பாஸ்கரமணியன் ஆய்வு செய்தார். மேலராமநதி கிராமத்தில் பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தையும் ஆய்வு செய்தார்.

மேலும் கோரைப்பள்ளம் கிராமத்தில் கம்பு, உளுந்து, தனசக்தி ரக விதைப்பண்ணை திடல்களையும் ஆய்வு செய்தார். கோடை உழவு செய்தல், கடைசி உழவில் வேப்பம் புண்ணாக்கு இடுவதாலும் மக்காச்சோளப் பயிரில் படைப்புழுவை கட்டுப்படுத்திடலாம் என வேளாண்மை உதவி இயக்குநர் கெர்சோன் தங்கராஜ் எடுத்துக் கூறினார்.

ஆய்வின்போது உதவி விதை அலுவலர் சரவணன், உதவி வேளாண்மை அலுவலர் உதயலெட்சுமி ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: