×

தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். சந்திப்பு!: சசிகலா விவகாரம், கூட்டணி குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல்..!!

டெல்லி: தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பானது நடைபெற்று கொண்டிருக்கிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென நேற்று பிற்பகல் தலைநகர் டெல்லிக்கு புறப்பட்டு வந்தார். அதேசமயத்தில் நேற்று இரவு 9:30 மணிக்கு கோயம்புத்தூரில் இருந்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைநகர் டெல்லிக்கு புறப்பட்டு வந்தார். இருவரும் தலைநகர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருந்தனர்.

சரியாக 10:45 மணியளவில் அவர்கள் தமிழ்நாடு இல்லத்தில் இருந்து புறப்பட்டு நாடாளுமன்ற வளாகத்திற்கு சென்றார்கள். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தற்போது பிரதமர் நரேந்திர மோடியை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசி வருகின்றனர். இவர்களுடன் அதிமுக எம்.எல்.ஏக்கள் எஸ்.பி. வேலுமணியும் உடனுள்ளார். தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி தோல்வியடைந்த பின் முதல்முறையாக ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கின்றனர். சசிகலா விவகாரம், கூட்டணி, அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் உள்ளிட்ட பல்வேறு விவகாரம் குறித்து இந்த சந்திப்பில் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா தடுப்பூசி, மேகதாது விவகாரம் குறித்தும் இருவரும் பிரதமரிடம் உரையாடுவார்கள் என்று தெரிகிறது. உட்கட்சி பிரச்சனையை சமாளிக்க முடியாமல் தவித்து வரும் நிலையில் பிரதமர் மோடியுடன் ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். சந்திப்பு நடைபெற்று வருகிறது. பிரதமர் உடனான இந்த சந்திப்பிற்கு பிறகு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Modi ,Delhi , Delhi, Prime Minister Modi, O.P.S. - EPS, meeting
× RELATED பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு; நாளை விசாரணை!