8 ஆண்டுகளுக்கு பிறகு குட்டியம் கிராமம் வழியாக ஆரணியில் இருந்து கலவைக்கு அரசு பஸ் மீண்டும் இயக்கம்

கலவை : திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டம் குட்டியம் கிராமம் வழியாக பல ஆண்டுகளாக கலவைக்கு தடம் எண் 9 என்ற அரசு பஸ் இயங்கி வந்தது. இந்த பஸ் எவ்வித அறிவிப்புமின்றி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென நிறுத்தப்பட்டது. இதனால், இந்த பஸ்சில் ஆரணி, கலவை பகுதிக்கு சென்று வந்த மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள், விவசாயிகள் என பல தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். பஸ்சை மீண்டும் இயக்கக்கோரி ஆரணி போக்குவரத்து பணிமனை மற்றும் அப்போதைய அமைச்சர்களிடம் கிராமமக்கள் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

தொடர்ந்து, கடந்த வாரம் ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பனிடம் கிராமமக்கள் கோரிக்கை விடுத்தனர். அவரது ஏற்பாட்டின்பேரில் ஆரணியில் இருந்து குட்டியம் வழியாக கலவைக்கு நேற்று மீண்டும் இயக்கப்பட்டது. இதனை கிராம மக்கள் வரவேற்று பஸ் நடத்துனர், ஓட்டுனருக்கு சால்வை அணிவித்து கவுரவித்தனர். பின்னர், பஸ்சுக்கு பூசணிக்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டு மகிழ்ச்சியடைந்தனர். பஸ் இயங்க உதவி செய்த போக்குவரத்துறை அமைச்சர் மற்றும் ஆற்காடு திமுக எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பனுக்கும் நன்றி தெரிவித்தனர்.

Related Stories:

More