×

நாடாளுமன்றத்திற்கு ட்ராக்டர் ஓட்டி வந்த ராகுல் காந்தி.. வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தல்!!

டெல்லி :  மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்றத்திற்கு ராகுல் காந்தி டிராக்டரில் வருகை தந்தார்.மத்திய அரசு கொண்டுவந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து, கடந்த ஆண்டு, நவம்பர் 26-ம் தேதி தலைநகர் டெல்லியில் போராட்டத்தைத் தொடங்கினார்கள் இந்திய விவசாயிகள். குறிப்பாக, பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 9 மாதங்களாக மிகத் தீவிரமான தொடர் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

விவசாயிகளின் தீவிரமான போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, அரசு மற்றும் விவசாயிகள் தரப்பில் 11 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், அரசின் பிடிவாதம் மற்றும் விவசாயிகளின் உறுதியான நிலைப்பாட்டால் முடிவு எதுவும் எட்டப்படாமல் அத்தனை பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்தன. இதற்கிடையே, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19-ந் தேதி தொடங்கியது. நாட்டு மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஜந்தர் மந்தர் மைதானத்தில் விவசாயிகள் போராட்டம் தினந்தோறும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி சிவப்பு நிற டிராக்டர் ஓட்டி நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார். தனது வீட்டில் இருந்தே நாடாளுமன்றத்திற்கு டிராக்டரில் பேரணியாக சென்றார்.போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளும் இதில் கலந்து கொண்டனர். பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களை சேர்ந்த தலைவர்கள் டிராக்டர் வாகனத்தில் அமர்ந்திருந்தனர். அத்துடன் கட்சியின் ஆதரவாளர்கள் பதாகைகளை ஏந்தி அந்த வாகனத்தை சுற்றி நின்றனர்.

பின்னர் நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் உணர்வுகளை புரிந்து கொண்டேன்.  அவர்கள் (மத்திய அரசு) விவசாயிகளின் குரல்களை அடக்குவதோடு நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துவதில்லை. புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். இந்த சட்டம் 3-4 வியாபாரிகளுக்கு மட்டும் ஆதரவாக உள்ளது என்பதை நாடு அறியும் என கூறினார்.

Tags : Rahul Gandhi , ராகுல் காந்தி
× RELATED ஜனநாயகம், அரசியலமைப்பு சட்டத்தை...