×

சீலநாயக்கன்பட்டி பகுதியில் தொடரும் போக்குவரத்து நெரிசல்-மேம்பாலம், கூடுதல் சாலை அமைக்க வலியுறுத்தல்

சேலம் : சேலம் சீலநாயக்கன்பட்டியில் போக்குவரத்து நெரிசலை போக்க மேம்பாலம், கூடுதல் சாலைகள் அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.
சேலம் கொண்டலாம்பட்டியில் நான்கு தேசிய நெடுஞ்சாலைகள் இணையும் பகுதிகளாகும். இதனால் சேலம்- பெங்களூர், சேலம்- கோவை, சேலம்- மதுரை, சேலம்- உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் எப்போதும் வாகன நெருக்கம் இருக்கும். குறிப்பாக சேலம்- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் குரங்குச்சாவடியில் இருந்து கொண்டலாம்பட்டி வரையும், கொண்டலாம்பட்டியில் இருந்து சீலநாயக்கன்பட்டி வரையும் வாகன நெருக்கம் அதிகம். இந்த இடைப்பட்ட பகுதிகளில் மட்டும் ஒரு நிமிடத்திற்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்வதாக புள்ளி விபரங்கள் கூறுகிறது.

இந்த பகுதிகளில்தான் தினசரி விபத்துக்கள் நடந்த வண்ணமாக இருந்தது. இங்கு சாலைகள் இணையும் பகுதிகளில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர். இதை பரிசீலித்த அரசு குரங்குச்சாவடி, ஏவிஆர் ரவுண்டானா, திருவாக்கவுண்டனூர், கந்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டது. இந்த மேம்பாலங்கள் அமைத்த பிறகு விபத்துக்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. ஆனால் சீலநாயக்கன்பட்டி பகுதியில் போக்குவரத்து நெரிசலால் அடிக்கடி விபத்துக்களும் நடந்து வருகிறது. இந்த பகுதிகளில் விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசலை போக்க மேம்பாலம் மற்றும் கூடுதல் சாலைகள் அமைக்கவேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து சேலத்தை சேர்ந்த வாகன ஓட்டிகள் கூறியதாவது: சீலநாயக்கன்பட்டியில் மூன்று தேசிய நெடுஞ்சாலை மற்றும் ஒரு மாநகராட்சி சாலை இணையும் பகுதியாகும். அனைத்து சாலைகளும் எப்போதும் வாகன நெருக்கம் இருந்து கொண்டே இருக்கும். இந்த பகுதியில் கொண்டலாம்பட்டியில் இருந்து சீலநாயக்கன்பட்டி நோக்கி செல்லும் வாகனங்கள் மேம்பாலத்தில் ஏறி நாமக்கல் சாலையிலும் சென்னை சாலையிலும் பிரிந்து செல்கிறது. பஸ், இருசக்கர வாகனங்கள் சர்வீஸ் சாலையில் செல்கிறது.

ஆனால் நாமக்கல்லில் இருந்து வாகனங்கள், உடையாப்பட்டி பைபாசில் இருந்து வரும் வாகனங்கள் செல்ல மேம்பாலங்கள் இல்லை. இந்த இரண்டு வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் சர்வீஸ் சாலையில் தான் செல்கிறது. மேலும் இவ்விரண்டு சாலையில் தான் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாகும். இரு வழியிலும் வாகனங்கள் இணையும்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சில நேரங்களில் நாமக்கல் சாலையில் தாசநாயக்கன்பட்டி வரையும், உடையாப்பட்டி பைபாசில் ஒன்றரை கிலோமீட்டர் தூரத்திற்கு கூட வாகனங்கள் அணிவகுத்து நின்றுவிடுகிறது.

இச்சாலையில்களில் அடிக்கடி போக்குவரத்து ஏற்படுவதால் கூடுதல் சாலை மற்றும் மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் என்று போக்குவரத்து ஆர்வலர்கள், வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதை பரிசீலித்த அரசு சீலநாயக்கன்பட்டி மேம்பாலத்திற்கு கீழ் உடையாப்பட்டி பைபாசில் கூடுதல் சாலை அமைக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட கலெக்டர், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சில நாட்களாக அதற்கான பணி நடந்தது. தற்போது அப்பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. சாலை அமைக்க சாக்கடை கால்வாய் கட்ட தோண்டப்பட்ட குழியில் கழிவுநீர் நாள் கணக்கில் தேங்கி நிற்கிறது.

போக்குவரத்து நெரிசலை போக்க நாமக்கல்லில் இருந்து கொண்டலாம்பட்டி நோக்கி வாகனங்கள் செல்ல மேம்பாலம் அமைத்தால் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு ஏற்படும். இதற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் தான் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு வாகன ஓட்டிகள் கூறினர்.

Tags : Seelanayakkanpatti , Salem: Motorists have demanded the construction of a flyover and additional roads at Seelanayakkanpatti in Salem to ease traffic congestion.
× RELATED ‘தீரன் அதிகாரம் 1 படத்தின் கதை’ 20...