சென்னை - பெங்களூரு தொழில் வணிக வழி அமைக்கும் பணி குறித்து ஒன்றிய இணை அமைச்சர் சோம் பிரகாஷ் விளக்கம்!!

சென்னை : சென்னை - பெங்களூரு தொழில் வணிக வழி அமைக்கும் பணி குறித்து, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ எழுப்பிய கேள்விக்கு, தொழில் வணிகத்துறை அமைச்சர் சோம் பிரகாஷ் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக, வைகோ எழுத்துப்பூர்வமாக, 1. சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு, தொழில் வணிக வழி அமைக்கும் பணி, எந்தக் கட்டத்தில் உள்ளது? (Progress of Chennai-Bengaluru Industrial Corridor)

2. திட்டத்துக்கான மொத்தச் செலவுத் தொகை எவ்வளவு? இதுவரை எவ்வளவு செலவு செய்து இருக்கின்றீர்கள்? ஆண்டுவாரியான கணக்கு தேவை.

3. எந்த நாளில் இயங்கத் தொடங்கும்? விவரங்கள் தருக ஆகிய கேள்விகளை எழுப்பியிருந்தார்.

இக்கேள்விகளுக்கு, தொழில், வணிகத்துறை இணை அமைச்சர் சோம் பிரகாஷ் அளித்த விளக்கம்:

1. சென்னை - பெங்களூரு வணிக வழி அமைக்கும் திட்டத்தின், முன்னோக்குப் பணிகள் நிறைவு பெற்று விட்டன. கீழ்க்காணும் மூன்று முனைகளில் (nodes), வளர்ச்சிப் பணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அ). ஆந்திரப் பிரதேசத்தில் கிருஷ்ணப்பட்டினம்

ஆ). கர்நாடகத்தில் துமகூரு

இ). தமிழகத்தில் பொன்னேரி.

மேற்கண்ட முனைகளில், முதன்மைத் திட்டம் வகுத்தல் பணிகளும், அதற்கான, பொறியியல் கட்டுமானப் பணிகளும், கிருஷ்ணப்பட்டினத்திலும், துமகூருவிலும் நிறைவு பெற்று விட்டன.

2020 டிசம்பர் 30 ஆம் தேதி, பொருளாக்கம் தொடர்பான அமைச்சர் அவைக் குழு, மேற்கண்ட இரு முனைகளிலும் வளர்ச்சிப் பணிகளுக்கு ஏற்பு வழங்கி விட்டது. மேற்கண்ட மூன்று முனைகள் குறித்தும், மேலும் சில தரவுகளைத் தருகின்றேன்.

1. கிருஷ்ணப்பட்டினம் (ஆந்திரப்பிரதேசம்): திட்ட சிறப்பு நோக்கு ஊர்தியால், (Project Special Purose Vehicle-SPV) திட்ட மேலாண்மை மதி உரைஞர்கள் (Project Management Consultant) தேர்வு செய்யப்பட்டு விட்டனர். 1,814 ஏக்கர் நிலம் மாற்றி வழங்கப்பட்டு இருக்கின்றது. சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் மதிப்பீட்டு அறிஞர்கள் குழு (Expert Appraisal Committee), காடுகள் பாதுகாப்பு மற்றும் பருவநிலை மாற்றங்கள் குறித்து, கொள்கை அளவில் ஏற்பு வழங்கி இருக்கின்றது.

2. துமகூரு (கர்நாடகா): திட்ட மேலாண்மை அறிஞர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டனர். 1,668 ஏக்கர் நிலம் மாற்றித் தரப்பட்டு விட்டது.

3. பொன்னேரி (தமிழகம்): முதன்மைத் திட்டம் வகுப்பதற்கும், தொடக்க நிலைப் பொறியியல் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குமான மதி உரைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டனர்.

2 மற்றும் 3 ஆவது கேள்விகளுக்கான விளக்கங்கள்:

சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் மதிப்பீட்டு அறிஞர்கள் குழு (Expert Appraisal Committee), 2020 டிசம்பர் மாதம் 30 ஆம் நாள் கூடியது; கிருஷ்ணப்பட்டினம், துமகூரு திட்டப் பணிகளுக்காக, ரூ.2,139.44 மற்றும் 1,701.81 கோடி செலவுத் தொகைக்கு ஏற்பு வழங்கியது. இந்த இரண்டு முனைகளுக்கான சாலைப் பணிகளை, 36 முதல் 48 மாதங்களில் நிறைவு செய்ய, காலக்கெடு வகுக்கப்பட்டு உள்ளது.

சென்னை - பெங்களூரூ தொழில் வணிக வழிக்காக, இதுவரை செலவு செய்யப்பட்டுள்ள தொகை விவரம் (ஆண்டுவாரியாக):

                                                        2018-19     2019-20     2020-21               மொத்தம்

1. கிருஷ்ணப்பட்டினம் முனை:     9.76            1.93        450.95               462.64 கோடி

2. துமகூரு முனை:                             4.43             4.49         584.24               594.44 கோடி

3. பொன்னேரி முனை:                         0               0.03              0.41                   0.44 கோடி

                            மொத்தம்                 14.49              6.45      1,039.38            1060.02 கோடி

இவ்வாறு அவர் விளக்கமளித்துள்ளார்.

Related Stories:

More