×

அண்டை மாநிலங்களில் இருந்து குட்கா கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை: விக்கிரமராஜா வலியுறுத்தல்

சென்னை: பெருநகர சென்னை காவல்துறை, மாநகராட்சி மற்றும் உணவு பாதுகாப்பு தரநிர்ணய சட்டத்துறைகளுடன் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு இணைந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா போன்ற பொருட்களின் விற்பனையை முழுமையாக தடுப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் ராயப்பேட்டையில் நடந்தது. திருவல்லிக்கேணி வியாபாரிகள் சங்க தலைவர் வி.பி.மணி தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, சென்னை மண்டல உணவுப்பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் பி.சதீஷ்குமார், திருவல்லிக்கேணி காவல் சரக உதவி ஆணையர் பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டு வணிகர்களுக்கு விழிப்புணர்வு பதாகைகளை அளித்தனர்.

 கூட்டத்தில் விக்கிரமராஜா பேசுகையில், ‘‘அண்டை மாநிலங்களில் இருந்து மாவா, குட்கா, பான்பராக், கஞ்சா, புகையிலை போன்ற போதை தரும் வஸ்துகள், தமிழகத்திற்குள் கடத்தப்படும் முதல் நிலையிலேயே தடுக்கப்பட்டு, கடத்தல்காரர், மொத்த விநியோகிப்பாளர்கள் மீதும் கடும் நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்’’ என்றார். கூட்டத்தில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொருளாளர் ஏ.எம்.சதக்கத்துல்லா, மாநில தலைமைச் செயலாளர் பேராசிரியர் ஆர்.ராஜ்குமார், மாநில செய்தி தொடர்பாளர் பி.பாண்டியராஜன், மாவட்ட தலைவர்கள் என்.டி.மோகன், எஸ்.சாமுவேல், ஒய்.எட்வர்ட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : Gutka ,Wickramarajah , Neighboring States, Gutka Smugglers, Operation, Wickramarajah
× RELATED குட்கா பதுக்கி விற்ற கடைக்காரர் கைது