கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட 9 அணைகளில் புனரமைக்க திட்டம்

* அணைகள் பாதுகாப்பு இயக்கக தலைமை பொறியாளர் மத்திய அரசுக்கு கடிதம்

* நீர்வளத்துறை அதிகாரி தகவல்

சென்னை: தமிழகத்தில் நீர்வளத்துறை, மின்வாரியம், வேளாண்மைத்துறை கட்டுபாட்டில் 120க்கும் மேற்பட்ட அணைகள் உள்ளது. இந்த அணைகள் 50 ஆண்டுகளுக்கு மேலாக பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படாமல் இருந்தது. இதனால், அணைகளில் மறுபுனரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டியிருந்தது. இதை தொடர்ந்து கடந்த 2012ல் உலக வங்கியின் நிதியுதவியின் ரூ.745 கோடியில் அணைகள் புனரமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் 111 அணைகள் புனரமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், இப்பணிகளுக்கான திட்ட அறிக்கை தயாரிப்பது மற்றும் பணிகளை தொடங்குவதில் தாமதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பொதுப்பணித்துறை கட்டுபாட்டில் உள்ள 69 அணைகள், மின்வாரிய கட்டுபாட்டில் 20 அணைகள், வேளாண்மைத்துறை கட்டுபாட்டில் உள்ள 2 அணைகள் என மொத்தம் 91 அணைகளில் மட்டுமே புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

இந்த அணைகளின் புனரமைப்பு பணிக்கே ரூ.803 கோடியாக திட்டச்செலவு அதிகரித்த நிலையில் இப்பணிகள் கடந்த மார்ச் மாதத்தில் தான் முழுவதுமாக முடிக்கப்பட்டன. அதே நேரத்தில், நிதி பற்றாக்குறை காரணம் காட்டி குடகானாறு உட்பட 20 அணைகளின் புரனமைப்பு பணி கைவிடப்பட்டன.இந்த சூழ்நிலையில் தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில் உலக வங்கி நிதியுதவியின் கீழ் இரண்டாம் கட்ட புனரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கான ஏற்படுகள் நடந்து வருகிறது. அதன்படி ரூ.610 கோடியில் 37 அணைகள் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்படவிருக்கிறது.

இதில், கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கைவிடப்பட்ட 9 அணைகளில் புனரமைப்பு பணிகளையும் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பேரில் தற்போது இப்பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு அனுமதி கேட்டு மத்திய அரசிடம், அணைகள் பாதுகாப்பு இயக்கக தலைமை பொறியாளர் ராஜா மோகன் கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்துக்கு அனுமதி கிடைத்தவுடன் உலக வங்கியின் நிதியுதவியை பெற்று, அணைகளின் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளப்படுகிறது. இதில், அணைகளின் கரைகளை பலப்படுத்துவது உள்ளிட்ட அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories:

>