எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை வழக்கு சிபிஐக்கு மாற்ற நடவடிக்கை: கமிஷனர் சங்கர் ஜிவால் பேட்டி

சென்னை: வடமாநிலங்களில் இருந்து சென்னை வந்து ஆதரவின்றி சுற்றித்திரிந்த 557 பேர், காக்கும் கரங்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் முதல் கட்டமாக 127 பேரை ஜி.டி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் அவர்களது சொந்த ஊர்களுக்கு வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று நடந்தது. சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் அவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் அடங்கிய பெட்டகத்தை வழங்கி வழியனுப்பி வைத்தார். நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர் லோகநாதன், ரயில்வே எஸ்.பி.தீபா சத்யன், சென்னை ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் இளங்கோவன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நிருபர்களிடம் கூறியதாவது:

சென்னையில் மீட்கப்பட்ட 127 வடமாநிலத்தவர்களை ரயில் மூலம் ராஜஸ்தான் மாநிலத்துக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்குள்ள அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர். ராஜஸ்தான் காப்பகங்களில் உள்ள 57 தமிழகர்களை ரயில் மூலம் சென்னைக்கு திரும்பி அழைத்து வருவார்கள். சென்னையில் வழிப்பறி, செல்போன் பறிப்பு உள்ளிட்ட குற்ற செயல்களை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி அதிகளவு குற்றச்சம்பவங்கள் நடைபெறும் பகுதிகள் ‘ஹாட் ஸ்பாட்’ ஆக அடையாளம் காணப்பட்டு, பகுதி வாரியாக பிரித்து கண்காணிப்பை அதிகரித்துள்ளோம். அங்கு, மப்டி உடையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர்.

குடியரசு தலைவர் சென்னை வர உள்ள நிலையில் அதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் சில நாட்களுக்கு முன்பு நடந்த ஏ.டி.எம் கொள்ளை தொடர்பாக இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதம் உள்ளவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள். ஏ.டி.எம் கொள்ளையர்கள் நாடு முழுவதும் 16 மாநிலங்களில் கைவரிசை காட்டியுள்ளனர். அதில் தமிழகத்தில் மட்டுமே கொள்ளையர்கள் பிடிபட்டுள்ளனர். இந்த வழக்கு சிபிஐக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

50% பேர் புதிய குற்றவாளிகள்

பல்வேறு வழக்குகளில் பிடிபடும் குற்றவாளிகளில் 50% பேர் புதிய குற்றவாளியாக இருக்கிறார்கள். அனைவரையும் கைது செய்து அவர்களின் விவரங்களை சேகரித்து வைத்துள்ளோம். மேலும் கண்காணிப்பு கேமரா உள்ள பகுதிகளில் 90% குற்றவாளிகள் கைது செய்யப்படுகின்றனர். சென்னையில், குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் ரவுடிகளை வகைப்படுத்தி கைது செய்து வருகிறோம். தேவைப்பட்டால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.

Related Stories: