அரசின் தீவிர நடவடிக்கை காரணமாக சென்னை மாநகராட்சியில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லை: அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழகத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதத்தில் கொரோனா  2வது அலை பரவத் தொடங்கியது. அதன்பிறகு படிப்படியாக அதிகரித்து மே மாதம்  பாதிப்பு உச்சத்தை தொட்டது. அப்போது தினமும் 35 ஆயிரத்துக்கும்  மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். முக்கிய நகரங்களான சென்னை, கோவை, மதுரை,  சேலம் போன்ற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் பல்வேறு  மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பத் தொடங்கியது. சில  மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு பற்றாக்குறையும் ஏற்பட்டது. இதனால்  நோயாளிகள் ஆம்புலன்சிலேயே காத்திருக்கும் நிலை கூட ஏற்பட்டது. அதன்பிறகு  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதையடுத்து பாதிப்பு எண்ணிக்ைக குறையத்  தொடங்கியது.

முதல் அலையிலும், இரண்டாவது அலையிலும் கொரோனாவால் அதிகம்  பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் இருந்தது. குறிப்பாக  2வது அலையில் தினசரி கொரோனா பாதிப்பு 3,500 முதல் 7,500 வரை சென்றது.  உயிரிழப்புகளும் மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னையில் அதிகமாக 110 வரை  சென்றது. எனவே, இதை கட்டுக்குள் கொண்டு வர மாநகராட்சி தீவிர நடவடிக்கை  மேற்கொண்டது செய்தது.  மேலும் முதல்  அலையை விட இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் உதவியுடன்  ஆம்புலன்ஸ்கள், படுக்கைள் தேவைப்பட்டது. இதனால் சாதாரண அறிகுறிகள்  இருப்பவர்கள் கூட ஆம்புலன்சை தொடர்பு கொண்டனர். அதேபோல், சாதாரண  அறிகுறிகள் இருப்பவர்களும் மருத்துவமனைகளில் குவியத் தொடங்கினர்.

இதனால்  ஆக்சிஜன் படுக்கைள் மற்றும் ஆம்புலன்ஸ்களின் தேவை அதிகமாக இருந்தது.  நிலைமையை சமாளிக்கும் வகையில் கார் ஆம்புலன்ஸ் என்ற திட்டத்தை சென்னை  மாநகராட்சி அறிமுகப்படுத்தியது.   இதனால் ஆம்புலன்ஸ் மற்றும் படுக்கைகளின் தேவைகள் குறையத் தொடங்கியது. இந்த  கார் ஆம்புலன்ஸ் திட்டத்திற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்திருந்தார்.  சென்னை  மாநகராட்சி எடுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கை காரணமாக சென்னையின் அனைத்து  மண்டலங்களிலும்  தற்போது எந்த தெருவிலும் 10க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்கள் இல்லை. இதனால் கட்டுப்படுத்தப்பட்ட மண்டலம் இல்லாத  நகரமாக சென்னை நீடிக்கிறது.

Related Stories:

>