×

பொறியியல், பி.டெக் படிப்புக்கு இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்: உயர்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: பொறியியல் மற்றும் பி.டெக் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இன்று முதல் ஆகஸ்ட் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைப்பு பெற்றுள்ள சுமார் 500 பொறியியல் கல்லூரிகளில் நடத்தப்படும் பி.இ, பி.டெக் உள்ளிட்ட பட்டப் படிப்புகளில் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்க உள்ளது. இந்த படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இன்று முதல் ஆகஸ்ட் 24ம் தேதி வரை www.tneaonline.org, அல்லது www.tndte.gov.in என்ற இணைய தளங்களின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
கடந்த வாரம் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்ட அறிவிப்பின் போது, பொறியியல் கல்லூரிக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்து இருந்தார்.

அத்துடன் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வந்த பிறகு தான் இளநிலை பொறியியல் படிப்பில் முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று அறிவித்து இருந்தார். அதன் பேரில் 2021-22ம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை நடத்தும் பணிகளை தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தொடங்கியுள்ளது. மாணவர்கள் விண்ணப்பிக்க வசதியாக பொறியியல் கல்லூரிகள், பாலி டெக்னிக் கல்லூரிகளில் உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேற்கண்ட படிப்புக்கான விண்ணப்பங்கள் வரப்பெற்ற பிறகு மாணவர்களுக்கான ரேண்டம் எண்கள் ஆகஸ்ட் 25ம் தேதி வெளியிடப்பட உள்ளன. அதைத் தொடர்ந்து செப்டம்பர் 4ம் தேதி தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

இதையடுத்து, சிறப்பு பிரிவு மாணவர்களுகான கவுன்சலிங் செப்டம்பர் 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடக்கும். பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சலிங் செப்டம்பர் 14ம் தேதி முதல் அக்டோபர் 16ம் தேதி வரை நடத்த  திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான துணை கவுன்சலிங் அக்டோபர் 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடத்தப்படும். ஆதிதிராவிடர், அருந்ததியர் பிரிவுக்கான ஒதுக்கீட்டில் காலியாக உள்ள இடங்களில் ஆதிதிராவிட வகுப்பினர் சேர்வதற்கான கவுன்சலிங் அக்டோபர் 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடக்கும். சேர்க்கை விண்ணப்பங்கள் பெறுவது முதல் கவுன்சலிங் நடத்தி இட ஒதுக்கீடு ஆணைகள் வழங்குவது அனைத்தும் ஆன்லைன் மூலமே நடத்த தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் ஏற்பாடு செய்துள்ளது.


அரசு கலை மற்றும் அறிவியல்  கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை
தமிழகத்தில்  இயங்கி வரும் 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப் படிப்புகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இந்த படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் www.tngasa.org மற்றும் www. tngasa.in  என்ற இணையதள முவகரிகளில் பதிவு செய்யலாம். இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் கல்லூரி உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். இளநிலை பட்ட படிப்புக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.48, பதிவுக் கட்டணம் ரூ.2. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.

விண்ணப்ப கட்டணம் மற்றும் பதிவு கட்டணங்களை இணையதளம் மூலம் செலுத்தலாம். அவ்வாறு செலுத்த முடியாதவர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் ‘இயக்குநர், கல்லூரி கல்வி இயக்ககம், சென்னை-6’ என்ற பெயரில் 26ம் தேதியோ அல்லது அதற்கு பின்னர் பெற்ற வங்கி வரைவோலை அல்லது நேரடியாகவும் செலுத்தலாம். இன்று முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.



Tags : Engineering, B.Tech, Apply, Higher Education
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...