×

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சொத்து மதிப்பு 55% உயர்வு: போலீஸ் எப்ஐஆரில் அதிர்ச்சி தகவல்

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சொத்து மதிப்பு 55 சதவீதம் உயர்ந்திருப்பதாக போலீஸ் எப்ஐஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். அப்போது பணி நியமனம், பேருந்துகள் கொள்முதல், உதிரிபாகங்கள் வாங்கியது, குறிப்பிட்ட நிறுவனங்களிடம் தான் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் வாங்க வேண்டுமென உத்தரவிட்டது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் எழுந்தது. இதைதொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் கந்தசாமி உத்தரவின் பேரில் ஐஜி பவானீஸ்வரி, எஸ்பி சண்முகம் தலைமையில் தனிப்படையினர் நடத்திய விசாரணையில் வருமானத்துக்கு அதிகமாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் சொத்து குவித்திருப்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக கரூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், கடந்த 21ம் தேதி எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி, விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர் மீது 13(2), 13(1)(பி), 2018 மற்றும் 12, 13(2), 13(1)(பி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனைத்தொடர்ந்து கடந்த 22ம் தேதி காலை 7 மணியளவில் சென்னை, கரூரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது பினாமிகளின் வீடுகள், அலுவலகங்கள், சாயப்பட்டறை, தனியார் நிறுவனம் என 26 இடங்களில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் கரூரில் மட்டும் 20 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. 14 மணி நேரம் நடந்த இந்த சோதனை முடிவில் கரூரில் மட்டும் ரூ.25.56 லட்சம் ரொக்கம் மற்றும் பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார், எம்.ஆர்.விஜயபாஸ்கர், இவரது மனைவி விஜயலட்சுமி, விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர் ஆகியோர் மீது போடப்பட்டுள்ள வழக்கில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்துள்ளது அம்பலமாகி உள்ளது. எப்ஐஆரில் போலீசார் தெரிவித்திருப்பதாவது: கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்ட போது தனது சொத்து மதிப்பு ரூ.2.51 கோடி என எம்.ஆர்.விஜயபாஸ்கர் வேட்பு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த தேர்தலின் போது, சொத்து மதிப்பு ரூ.8.62 கோடி என குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் 55 சதவீதம் சொத்து மதிப்பு உயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த வருமானத்துக்கு எந்த முகாந்திரமும் இல்லை. இதனால் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மனைவி விஜயலட்சுமி, விஜயபாஸ்கர் சகோதரர் சேகர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : AIADMK ,minister ,MR Vijayabaskar , AIADMK, Former Minister, MR Vijayabaskar, Property Value, Police FIR,
× RELATED வாக்காளர்களுக்கு பாஜ பணம் பட்டுவாடா...