கர்நாடக அரசியல் நெருக்கடி முற்றுகிறது முதல்வர் எடியூரப்பா பதவி பறிப்பா?... பாஜ மேலிடம் இன்று முக்கிய முடிவு

பெங்களூரு: கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராக பாஜ.வில் உட்கட்சி பூசல் அதிகமாகி இருக்கிறது. இதன் காரணமாக ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை சமாளிக்க, எடியூரப்பாவிடம் இருந்து முதல்வர் பதவியை பறிப்பது குறித்து கட்சி மேலிடம் இன்று முக்கிய முடிவு எடுக்கும் என்று தெரிகிறது. கர்நாடகாவில் மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததை தொடர்ந்து, கடந்த  2019 ஜூலை 26ம் தேதி பாஜ ஆட்சி அமைத்தது. எடியூரப்பா முதல்வராக  பதவியேற்றார். இவருக்கு 78 வயதாகி விட்டதால், பாஜ கட்சியின் கொள்கைப்படி பதவியில் இருந்து விலக வேண்டும். அவரை பதவி நீக்கம் செய்யும்படி கர்நாடக பாஜ எம்எல்ஏ.க்கள், அமைச்சர்களில் ஒரு பிரிவினர் பல மாதங்களாக போர்க்கொடி தூக்கி வருகின்றனர். இதனால், எடியூரப்பாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதை சமாளித்து இன்றுடன் தனது 2 ஆண்டு ஆட்சி காலத்ைத எடியூரப்பா நிறைவு செய்கிறார்.

கடந்த வாரம் டெல்லி சென்ற எடியூரப்பா, பிரதமர் மோடி, ஒன்றிய  உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோரை  சந்தித்து பேசினார். பின்னர், ‘கட்சி மேலிடம் கேட்டுக்கொண்டால் பதவியை  ராஜினாமா செய்வேன்’ என்று எடியூரப்பா அறிவித்தார். ஆனால், அவர் ராஜினாமா  செய்தால் கர்நாடகாவில் பாஜ கடும் பின்னடைவை சந்திக்க நேரிடும் என்று பாஜ தலைமைக்கு லிங்காயத்து மடாதிபதிகள்  எச்சரிக்கை விடுத்தனர். அவர்களை  எடியூரப்பா சமாதானம் செய்தார். இந்நிலையில், 2 ஆண்டு ஆட்சி நிறைவு பெறுவதை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள், எம்எல்ஏ.க்களுக்கு பெங்களூருவில்  இன்று  காலை எடியூரப்பா விருந்து அளிக்கிறார். அதன் பிறகு, கட்சி மேலிடம் உத்தரவிட்டால், ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுப்பார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், நேற்று காலை பெங்களூருவில் பேட்டி அளித்த எடியூரப்பா, ‘கர்நாடகாவில் தலைமை மாற்றம் எதுவும் நடக்காது. அது வெறும் வதந்தி. இருப்பினும், கட்சி மேலிடம் உத்தரவிட்டால் அதற்கு கட்டுப்படுவேன்,’ என்றார். அதேபோல், கோவாவில் பாஜ தேசிய தலைவர் ஜேபி நட்டா நேற்று அளித்த பேட்டியிலும், ‘கர்நாடகாவில் தலைமை மாற்றம் எதுவும் கிடையாது. எடியூரப்பா சிறப்பாக செயல்படுகிறார்,’ என்றார். இதனால், எடியூரப்பாவின் பதவி தப்பி விட்டதாக பரபரப்பு நிலவியது. ஆனால், எடியூரப்பா நேற்று மாலை அளித்த புதிய பேட்டியில், ‘‘முதல்வர் பதவியில் நீடிப்பானே அல்லது விலகுவேனா என்பது நாளை தான் (இன்று) தெரியும்,’’ என்றார்.

இதன்மூலம், அவர் பதவியில் நீடிப்பது பற்றி பாஜ தலைமை இன்று முக்கிய முடிவு எடுக்கும் என தெரிகிறது. ஒருவேளை பாஜ மேலிடம் உத்தரவிட்டால், விருந்து நிகழ்ச்சிக்குப் பிறகு ஆளுநரை சந்தித்து எடியூரப்பா தனது ராஜினாமா கடிதத்தை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கர்நாடகா அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மடாதிபதிகள் எச்சரிக்கை

பெங்களூரு அரண்மனை மைதானத்தில் கர்நாடக மடாதிபதிகள் மாநாடு நேற்று நடந்தது. இதில், பல்வேறு மடங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மடாதிபதிகள் பங்கேற்றனர். ‘கர்நாடக பாஜ ஆட்சி எடியூரப்பா தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எனவே, அவரை மாற்றும் முடிவை பாஜ மேலிடம் கைவிட வேண்டும். எடியூரப்பாவை மாற்றினால் கர்நாடகாவில் பாஜ கட்சி ஆட்டம் கண்டுவிடும் என்பது உண்மை. இதை யாருடைய வற்புறுத்தலின் பேரிலும் நாங்கள் கூறவில்லை,’ என்று அவர்கள் கூறினர்.

தகவல் வரவில்லை

உடுப்பி  மாவட்டத்தில் நடந்த விவசாய மாநாட்டில் கலந்து கொண்ட பாஜ மாநில தலைவர்  நளின் குமார் கட்டீல் கூறுகையில், ‘‘முதல்வர் மாற்றம் பற்றி பாஜ மேலிடத்தில் இருந்து இப்போது வரையில் எவ்வித தகவலும்  கொடுக்கப்படவில்லை,’’ என்றார்.

குழப்பிய எடியூரப்பா

முதல்வர் பதவியில் மாற்றம் இல்லை என்று நேற்று காலை கூறிய எடியூரப்பா, ‘முதல்வர் பதவியில் நீடிப்பேனா அல்லது விலகுவேனா என்பது நாளைதான் தெரியும்,’ என்று நேற்று மாலை மீண்டும் பேட்டி அளித்தார். இது, பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல்வராக எடியூரப்பா பொறுப்பேற்று இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதற்கான சிறப்பு மலர் மற்றும் பாராட்டு விழா பெங்களூரு விதான் சவுதாவில் காலை நடக்கிறது. இதில், முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பா விலகுவது குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என்று தெரிகிறது.

Related Stories: