ஆண்கள் ஹாக்கி இந்தியா அதிர்ச்சி தோல்வி

ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி ஏ பிரிவில், இந்தியா நேற்று தனது 2வது லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. தொடக்கத்தில் இருந்தே ஒருங்கிணைந்து விளையாடி கடும் நெருக்கடி கொடுத்த ஆஸ்திரேலிய அணிக்கு பியேல் டிஜே 10வது நிமிடத்திலேயே கோல் அடித்து முன்னிலை ஏற்படுத்தினார். இந்திய கோல் பகுதியை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்திய ஆஸி. அணி 21வது நிமிடத்தில் ஹேவர்ட், 23வது நிமிடத்தில் ஓகில்வி, 26வது நிமிடத்தில் பெல்ட்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து கோல் அடித்து அமர்க்களப்படுத்த 4-0 என முன்னிலை பெற்றது.

இதனால் நிலைகுலைந்து போன இந்திய அணிக்கு தில்பிரீத் சிங் 34வது நிமிடத்தில் கோல் போட்டி நம்பிக்கை அளித்தார். ஆனால், ஆஸ்திரேலிய வீரர்களின் துடிப்பான ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் இந்திய வீரர்கள் ஸ்தம்பித்து நிற்க, கோவர்ஸ் 40வது மற்றும் 42வது நிமிடத்தில் தொடர்ச்சியாக 2 கோல் திணித்து அசத்தினார். இந்திய அணி கடுமையாக முயற்சித்தும் ஆஸி. தற்காப்பு அரணை தகர்த்து முன்னேற முடியவில்லை. ஆட்டத்தின் 51வது நிமிடத்தில் ஆஸி. வீரர் பிராண்ட் கோல் அடிக்க, அந்த அணி 7-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. பதக்க கனவுடன் களமிறங்கியுள்ள இந்திய அணிக்கு இந்த படுதோல்வி மிகுந்த அதிர்ச்சியை அளித்துள்ள நிலையில், மற்றொரு பலம் வாய்ந்த அணியான ஸ்பெயினுடன் நாளை மோத உள்ளது.

Related Stories: