×

மகளிர் டேபிள் டென்னிஸ் 3வது சுற்றில் மனிகா

மகளிர் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் விளையாட, இந்திய நட்சத்திரம் மனிகா பத்ரா (62வது ரேங்க்) தகுதி பெற்றார். தனது 2வது சுற்றில் உக்ரைன் வீராங்கனை மார்கரிடா பெசோட்ஸ்காவாவுடன் (33வது ரேங்க்) நேற்று மோதினார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில், மனிகா 4-11, 4-11 என முதல் 2 கேம்களையும் இழந்து பின்தங்கினார். இதனால் தோல்வி நிச்சயம் என கருதப்பட்ட நிலையில், தனது வியூகங்களை மாற்றி கடும் நெருக்கடி கொடுத்த மனிகா 11-7, 12-10 என அடுத்த 2 கேம்களையும் கைப்பற்றி பதிலடி கொடுத்தார். 5வது கேமில் பெசோட்ஸ்கா 11-8 என வெற்றியை வசப்படுத்தி மீண்டும் முன்னிலை பெற்றார். எனினுன், மனம் தளராமல் உறுதியுடன் போராடிய மனிகா 11-5, 11-7 என கடைசி 2 கேம்களையும் கைப்பற்றி 4-3 என்ற கேம் கணக்கில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார். விறுவிறுப்பான இப்போட்டி 57 நிமிடங்களுக்கு நடந்தது. இன்று தனது 3வது சுற்றில் ஆஸ்திரியாவின் சோபியா போல்கனோவாவை வீழ்த்தினால், மனிகா கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெறலாம்.

* போராடி தோற்றார் சத்தியன்
ஆண்கள் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் 2வது சுற்றில் இந்தியாவின் சத்தியன் ஞானசேகரன், ஹாங்காங் வீரர் லாம் சியுஹாங்குடன் நேற்று மோதினார். கடைசி வரை இழுபறியாக அமைந்த இப்போட்டியில் சத்தியன் 3-4 என்ற கேம் கணக்கில் போராடித் தோற்று (7-11, 11-7, 11-4, 11-5, 9-11, 10-12, 6-11) ஏமாற்றத்துடன் வெளியேறினார். பரபரப்பான இப்போட்டி 1 மணி, 3 நிமிடத்துக்கு நீடித்தது.

* பதக்க வேட்டையில்...
டோக்கியோ ஒலிம்பிக் பதக்க பட்டியலில் சீனா இதுவரை 6 தங்கம், 1 வெள்ளி, 4 வெண்கலம் என 11 பதக்கங்களுடன் முதலிடம் வகிக்கிறது. போட்டியை நடத்தும் ஜப்பான் 5 தங்கம், 1 வெள்ளியுடன் 2வது இடத்திலும், அமெரிக்கா 4 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் வென்று 3வது இடத்திலும் உள்ளன. இந்திய அணி ஒரு வெள்ளிப் பதக்கத்துடன் 24வது இடத்தில் உள்ளது.

Tags : Manika , Manika in the 3rd round of women's table tennis
× RELATED அக்டோபரில் திரைக்கு வரும் பித்தல மாத்தி