பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை தொடர்ந்து குமரி கிறிஸ்தவ இயக்க நிர்வாகி கைது: தூத்துக்குடி சிறையில் அடைப்பு

களியக்காவிளை: குமரி மாவட்டம் அருமனை வட்டார கிறிஸ்தவ இயக்கம் சார்பில் கோரிக்கை விளக்க பொதுக்கூட்டம் கடந்த 18ம்தேதி அருமனையில் நடந்தது. இதில் பேசிய ஜனநாயக கிறிஸ்தவ பேரவையின் தலைவரும், பாதிரியாருமான ஜார்ஜ் பொன்னையா பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மாற்று மதத்தினரை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அருமனை போலீசார் நேற்று முன்தினம் மதுரை அருகே காரில் சென்று கொண்டிருந்த பாதிரியார்  ஜார்ஜ் பொன்னையாவை கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர். உடல் நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, சிறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் அருமனை வட்டார கிறிஸ்தவ இயக்க செயலாளர் ஸ்டீபனை போலீசார் தேடி வந்தனர். நேற்று அதிகாலை குமரி - கேரள எல்லையில் உள்ள காரோடு பகுதியில் ரப்பர் தோட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் இருந்த ஸ்டீபனை போலீசார் கைது செய்தனர். குழித்துறை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு பின் அவரை குழித்துறை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தினர். ஸ்டீபனை 15 நாள் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் செல்வம் உத்தரவிட்டார். இதையடுத்து அவர், தூத்துக்குடி பேரூரணியில் உள்ள மாவட்ட சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.

Related Stories: