நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் பாஜ.வுக்கு எதிராக மாநில கட்சிகள் திரள வேண்டும்: மம்தாவை தொடர்ந்து சிரோன்மணியும் அழைப்பு

புதுடெல்லி: ‘வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்குள் பாஜ.வுக்கு எதிராக அனைத்து மாநில கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும்,’ என்று சிரோன்மணி அகாலி தளம் தலைவர் சுக்பிர் சிங் பாதல் அழைப்பு விடுத்துள்ளார்.

பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த சிரோன்மணி அகாலி தளம், ஒன்றிய அரசிலும் இடம் பெற்று இருந்தது. ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களை கண்டித்து கூட்டணியில் இருந்து சில மாதங்களுக்கு முன் வெளியேறியது. ஒன்றிய அமைச்சராக இருந்த சிரோன்மணி அகாலி தளம் தலைவர் சுக்பிர் சிங் பாதலின் மனைவி ஹர்ஷிம்ரத் கவுர், தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும், பாஜ.வுக்கு எதிராக கட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

அடுத்தாண்டு பஞ்சாப் உள்ளிட்ட 7 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு பாஜ, காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகள் முழு வீச்சில் தயாராகி வருகின்றன. பஞ்சாப்பில் முக்கிய கட்சியாக கருதப்படும் சிரோன்மணி அகாலி தளம், பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. இது தொடர்பாக சுக்பிர் சிங் பாதல் நேற்று அளித்த பேட்டியில், ‘‘பகுஜன் சமாஜ் கட்சி உடனான கூட்டணி நிரந்தரமானது. 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன், மாநில கட்சிகள் அனைத்தும் பாஜ.வுக்கு எதிராக ஓரணியில் அணி திரள வேண்டும். இது தொடர்பாக பல்வேறு மாநில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்,’’ என்றார். மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியும் நேற்று முன்தினம் இதேபோன்ற அழைப்பை விடுத்தார். மேலும், இது பற்றி காங்கிரஸ் தலைவர் சோனியாவையும் சந்தித்து பேச உள்ளார்.

Related Stories:

>