×

சிபிஎப்சி அனுமதித்து 3 ஆண்டுகளான போதும் பிடிவாதம் ஆதார் படத்தில் 23 இடங்களில் கத்திரி போட சொல்லும் உதய்: இயக்குநர் புலம்பல்

மும்பை: ‘ஆதார்’ படத்திற்கு ஒன்றிய திரைப்பட சான்றிதழ் வாரியம் (சிபிஎப்சி) அனுமதி தந்தும், அதில் 28 இடங்களில் காட்சிகளை நீக்கச் சொல்லி இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (உதய்) படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் இழுத்தடிப்பதாக இயக்குநர் சுமன் கோஷ் கவலை தெரிவித்துள்ளார். தேசிய விருது வென்ற இயக்குநரான சுமன் கோஷ், ஆதார் கார்டை மையமாக வைத்து ‘ஆதார்’ என்ற இந்தி படத்தை தயாரித்துள்ளார். ஆதார் அடையாள அட்டையை வழங்கும் ‘உதய்’ அமைப்பு (யுஐடிஏஐ), இந்த படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் இழுத்தடிப்பதாக இயக்குநர் சுமன் புகார் கூறி உள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது: ஆதார் படத்திற்கு கடந்த 2019ம் ஆண்டு ஒன்றிய திரைப்பட சான்றிதழ் வாரியம் அனுமதி அளித்தது. அதே ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய தேதி திட்டமிட்டிருந்தோம். ஆனால், ரிலீஸ் தேதிக்கு ஒருவாரத்திற்கு முன்பாக, இப்படத்திற்கு உதய் ஆட்சேபம் தெரிவிப்பதாக துணை தயாரிப்பு நிறுவனமான ஜியோ ஸ்டியோஸ் தகவல் தெரிவித்தது. இதனால், படத்தை குறிப்பிட்ட தேதியில் ரிலீஸ் செய்ய முடியவில்லை. சிபிஎப்சி ஒப்புதல் தந்த பிறகும், இந்த படத்தில் 28 இடங்களில் காட்சிகளை நீக்க வேண்டுமென உதய் கூறியுள்ளது. ஆனால், அது வாய்வழி உத்தரவாக மட்டுமே கூறி உள்ளார்.

எந்தெந்த காட்சிகள் என விளக்கம் கேட்டு நானும் பலமுறை இ-மெயில், கடிதம், போன் மூலமாக கேட்டும், அதிகாரப்பூர்வமாக எந்த பதிலும் தரவில்லை. இதனால், 6 மாதமாக படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை. இந்த படம் ஆதார் கார்டுக்கு ஆதரவான படம். அப்படியிருந்தும் ரிலீஸ் செய்ய விடாமல் தடுப்பது ஆச்சரியம் அளிக்கிறது. ஆட்சேபனை இருந்தால் பேசித் தீர்க்கலாம், அதற்கு இதுபோன்று படத்தை வெளியிட விடாமல் தடுப்பது விநோதமாகவும், செய்வதறியாமலும் இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

* கதை என்ன?
ஜமுவா கிராமத்தில் வசிக்கும் பார்சுவா என்பவர் அந்த கிராமத்திலேயே முதல் நபராக ஆதார் எண் பெறுகிறார். ஆதார் மூலமாக அரசாங்கம் தங்களின் தகவல்களை சேகரித்து, குளியலறையில் என்ன நடக்கிறது என்பது வரை கண்காணிக்க முடியும் என கிராமவாசிகள் தவறாக கருதுகின்றனர். எனவே, ஆதாரால் நன்மைகள் பல கிடைத்தாலும் அதை புறக்கணிக்கின்றனர். பார்சுவா மட்டும் வாங்கிய நிலையில், அந்த ஆதார் எண்ணால் அவரது மனைவி மரணமடைவார் என கிராம பூசாரி குறி சொல்கிறார். இதனால், அதிர்ச்சி அடைந்த கதாநாயகன், மாற்றவே முடியாத தனது ஆதார் எண்ணை மாற்ற முயற்சிக்கிறார். அவர் ஆதார் எண்ணை மாற்றினாரா, கிராமவாசிகளிடம் ஆதார் குறித்த புரிதல் ஏற்பட்டதா என்பதே ‘ஆதார்’ படத்தின் கதை. இதில் வரும் ‘நானே ஆதார்’ என்பது போன்ற சில வசனங்கள் எதிர்மறையாக இருப்பதாகவும், கிராம மக்கள் மத்தியில் ஆதார் தவறாக சித்தரிக்கப்படுவதாகவும் உதய் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Tags : Uday ,Adarsh ,CPFC , Uday lashes out at 23 places in CBFC-stubborn Aadhar film: Director laments
× RELATED மக்கள் விரோத சட்டங்களுக்கு ஒப்புதல்...