ஆட்டோ டிரைவர் ஓடஓட வெட்டி கொலை: வெடிகுண்டு வீச்சில் தம்பி தப்பியதால் ஆத்திரம்; காஞ்சிபுரத்தில் பயங்கரம், பதற்றம், பரபரப்பு

காஞ்சிபுரம்: வெடிகுண்டு வீசியதில் தம்பி தப்பியோடியதால் ஆவேசம் அடைந்த கும்பல், அண்ணன் மீது வெடிகுண்டு வீசியதுடன் சரமாரி வெட்டிக்கொலை செய்தனர். காஞ்சிபுரத்தில் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் நகராட்சி 19வது வார்டு பல்லவர்மேடு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (43). இவரது தம்பி ரகு (38). இவர் மீது 2 கொலை வழக்குகள் உள்ளது. கடந்த 2013ம் ஆண்டு பிரபல ரவுடிகள் தினேஷ், தியாகுவின் கூட்டாளி பிரபாகரனின் அண்ணனை வெட்டி கொலை செய்தனர். இதனால் பிரபாகரன், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ரகுவின் அண்ணனும் தேமுதிக பேச்சாளருமான சரவணனை வெட்டிக்கொலை செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளி அனைவரும் சிறை தண்டனை அனுபவித்துவிட்டு வெளிவந்தனர்.

இந்நிலையில் கடந்த 2 வாரத்துக்கு முன் செந்தில்குமாரின் தந்தை நடராஜன் இறந்தார். இதையொட்டி, 13ம் நாள் சடங்கு நடக்க இருந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு செந்தில்குமார், ரகு குடும்பத்தினர் அனைவரும் ஒன்றுகூடி செந்தில்குமாரின் தாய் வீட்டில் பேசி கொண்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென ஒரு கும்பல் வந்தது. அவர்கள், வீட்டின் மீது சரமாரி நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். பின்னர் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியால் அங்கிருந்த அனைவரையும் தாக்கினர். அந்த நேரத்தில், ரகுவை குறிவைத்து தாக்கியபோது அவர், சுவர் ஏறி குதித்து தப்பிவிட்டார்.

அவர்களது நோக்கம் நிறைவேறாததால் ஆத்திரமடைந்த கும்பல், ரகுவின் அண்ணன் செந்தில்குமாரை சுற்றிவளைத்து சரமாரி வெட்டினர். அவர்களிடம் இருந்து தப்பிய அவர், அங்குள்ள முட்டு சந்தில் சிக்கி கொண்டார். இதையடுத்து அவர்கள், செந்தில்குமார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி, சரமாரி வெட்டினர். இதில் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். ஆத்திரம் அடங்காத மர்மநபர்கள், அங்கு கிடந்த பாறாங்கல் மற்றும் கட்டைகளை எடுத்து செந்தில்குமார் தலையில் போட்டுவிட்டு தப்பினர்.

இந்த தாக்குதலில் செந்திலின் சகோதரிகள் கோடீஸ்வரி, மணிமேகலை, மனைவி சசிகலா ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்களை, அக்கம்பக்கத்தினர் மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தகவலறிந்து காஞ்சிபுரம் எஸ்பி சுதாகர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தார். மேலும், தடவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு, அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய், சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றுவிட்டது. புகாரின்படி சிவகாஞ்சி போலீசார், சந்தேகங்ததின்பேரில் 5 பேரை பிடித்து விசாரிக்கின்றனர். தம்பி கொல்ல குறி வைத்து வந்த கும்பல், அண்ணனை கொடூரமாக கொலை செய்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Related Stories:

>