ஏரியில் இருந்து வெளியேறி ஜிஎஸ்டி சாலையில் தேங்கி நிற்கும் உபரிநீர்: நோய் தொற்று பரவும் அபாயம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே சிங்கபெருமாள்கோயில் பகுதி, ஜிஎஸ்டி சாலையோரத்தில் குடிநீர் ஆதாரமாக உள்ள பழமையான ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர், ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால், அப்பகுதி மக்களுக்கு பல்வேறு நோய் தொற்றுகள் பரவும் அபாயம் உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள்கோயில் பகுதியில், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே, குடிநீர் ஆதாரமாக உள்ள மிக பழமையான விஞ்சியம்பாக்கம் ஏரி அமைந்துள்ளது. மழைக்காலங்களில் இந்த ஏரியில் தண்ணீர் நிரம்பி, உபரிநீர் செல்ல வழியின்றி, ஜிஎஸ்டி சாலையோரத்தில் ஆங்காங்கே குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால், அவ்வழியாக, பைக், கார் உள்பட பல வாகனங்களில் செல்பவர்கள் கடும் அவதியடைகின்றனர். இதையொட்டி, அப்பகுதியில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதை சரிசெய்யும் நோக்கில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், அதிமுக ஆட்சியில், இந்த  ஏரியின் உபரிநீர் வெளியேற கால்வாய் அமைக்கும் பணி துவங்கப்பட்டது. ஆனால், இப்பணிகள் தற்போது ஆமைவேகத்தில் நடக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழையால், சிங்கப்பெருமாள்கோயில் ஊராட்சி பகுதிகளில் இருந்து வெளியேறும் உபரிநீர், ஜிஎஸ்டி சாலையில் பல நாட்களாக தேங்கியுள்ளது. இதனால், அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசி, அதில் கொசுக்கள் உற்பத்தியாகி, பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா, சிக்குன் குன்யா உள்பட பல்வேறு மர்ம காய்ச்சல், நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுபோல் தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள், பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும், இதுவரை கண்டும் காணாமல் உள்ளனர் என புகார் எழுந்துள்ளது. எனவே, விஞ்சியம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.  ஜிஎஸ்டி சாலையில் தேங்கியுள்ள நீரை உடனடியாக அகற்ற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>