தூத்துக்குடி பனிமயமாதா பேராலய திருவிழா: நாளை காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

தூத்துக்குடி: தூத்துக்குடி பனிமயமாதா பேராலய திருவிழா நாளை காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஆக.5ம் தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது. தூத்துக்குடி பனிமயமாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் ஜூலை 26ம் தேதி தொடங்கி, ஆக.5ம் தேதி வரை நடைபெறும். இந்த ஆண்டு திருவிழாவையொட்டி நாளை காலை 5 மணிக்கு ஜெபமாலை நடக்கிறது. 5.30 மணிக்கு சிறப்பு திருப்பலியும், கொடியேற்றமும் பிஷப் ஸ்டீபன் தலைமையில் நடக்கிறது. காலை 8 மணிக்கு 2ம் திருப்பலி நடக்கிறது. பகல் 12 மணிக்கு பனிமயமாதாவுக்கு பொன்மகுடத்தை ஆன்ட்ரு டிரோஸ் அணிவிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

மதியம் 3 மணிக்கும், இரவு 7 மணிக்கும் ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. திருவிழா நாட்களில் தினமும் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஆக.4ம் தேதி நடைபெறும் 10ம் திருவிழா அன்று காலை 5 மணிக்கு ஜெபமாலையும், 5.30 மணிக்கு முதல் திருப்பலியும், 6.30 மணிக்கு 2ஆம் திருப்பலியும், 7.30 மணிக்கு மூன்றாம் திருப்பலியும், 8.30 மணிக்கு 4ஆம் திருப்பலியும், 9.30 மணிக்கு 5ஆம் திருப்பலியும் நடக்கின்றன. மதியம் 3 மணிக்கு ஜெபமாலை, அருளிக்க ஆசீர் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இரவு 7 மணிக்கு பெருவிழா மாலை ஆராதனை பிஷப் ஸ்டீபன் தலைமையில் நடக்கிறது.

ஆக.5ம் தேதி தூய பனிமய அன்னையின் பெருவிழாவையொட்டி (11ம் திருவிழா) காலை 5 மணிக்கு ஜெபமாலை, 5.30 மணிக்கு முதல் திருப்பலி, 7.30 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் 2ஆம் திருப்பலி, 10 மணிக்கு கோட்டாறு மறை மாவட்ட ஆயர் நசரேன் தலைமையில் 3ஆம் திருப்பலி, மதியம் 12 மணிக்கு 4வதாக சிறப்பு நன்றி திருப்பலி, மாலை 5 மணிக்கு பாளையங்கோட்டை மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் 5ம் திருப்பலி ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இரவு 7 மணிக்கு தூய பனிமய அன்னைக்கு குடும்பங்களை ஒப்புக் கொடுத்தல், நற்கருணை ஆசீர் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

ஆக.6ம் தேதி நடைபெறும் 12ம் திருவிழா அன்று காலை 5.30 மணிக்கு கொடியிறக்க விழாவும், நன்றி திருப்பலியும் நடக்கின்றன. ஏற்பாடுகளை பேராலய திருத்தல பணியாளர்கள் பங்குத்தந்தை குமார்ராஜா, உதவி பங்குத்தந்தை விமல்ஜேன், சகோதரர் மனோஜ் மற்றும் அருட்சகோதரிகள், இயேசு சபையினர், லசால் அருட் சகோதரர்கள், பேராலய மேய்ப்பு பணிக்குழுவினர், பங்கு இறைமக்கள் ஆகியோர் செய்துள்ளனர்.

மக்கள் பங்கேற்பில்லை

கொரோனா ஊரடங்கின் காரணமாக இந்த ஆண்டு பெருவிழா பேராலயத்தில் மக்கள் பங்கேற்பின்றி நடைபெறும். கொடி பவனி, திருவிருந்து விழா, நற்கருணை பவனி, சப்பர பவனி ஆகியவை நடைபெறாது. பெருவிழா நிகழ்ச்சிகள் உள்ளூர் டி.வி. மற்றும் பசிலிக்கா யூ டியூப் சேனல் ஆகியவற்றில் நேரலையாக ஒளிபரப்பப்படும் என ஆலயம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>