×

ஜார்ஜ் பொன்னையாவை தொடர்ந்து குமரி கிறிஸ்தவ இயக்க நிர்வாகி கைது: தூத்துக்குடி சிறையில் அடைப்பு

நாகர்கோவில்: குமரி மாவட்டம் அருமனை வட்டார கிறிஸ்தவ இயக்கம் சார்பில் கடந்த 18ம்தேதி அருமனையில் கோரிக்கை விளக்க ெபாதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பேசிய ஜனநாயக கிறிஸ்தவ பேரவையின் தலைவரும், பாதிரியாருமான ஜார்ஜ் பொன்னையா பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாற்று மதத்தினரை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. பாதிரியாரின் பேச்சு சமூக வலை தளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது பல்வேறு காவல் நிலையங்களில் பா.ஜ. மற்றும் இந்து அமைப்பினர் புகார் அளித்தனர். இதையடுத்து பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த அருமனை வட்டாரகிறிஸ்தவ இயக்க செயலாளர் ஸ்டீபன் உள்ளிட்டோர் மீது அவதூறாக பேசுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் அருமனை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஜார்ஜ் பொன்னையாவை கைது செய்ய 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் நேற்று அதிகாலையில் மதுரை அருகே காரில் சென்று கொண்டிருந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை குமரி மாவட்டம் கொண்டு வந்து, குழித்துறை மாஜிஸ்திரேட் செல்வம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுத்தினர்.


அவரை, 15 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பாளை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் நேற்று இரவு உடல் நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, பாளை சிறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அருமனை வட்டார கிறிஸ்தவ இயக்க செயலாளர் ஸ்டீபனை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் நள்ளிரவில் குமரி - கேரள எல்லையில் உள்ள காரோடு பகுதியில் இருக்கும் ரப்பர் தோட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் வைத்து ஸ்டீபனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை அருமனை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணைக்கு பின், ஸ்டீபனை இன்று காலை குழித்துறை மாஜிஸ்திரேட் செல்வம் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி அவரை தூத்துக்குடி பேரூரணியில் உள்ள மாவட்ட சிறைச்சாலைக்கு போலீசார் அழைத்து சென்று அடைத்தனர்.



Tags : Kumari ,Christian ,George Ponnaya ,Thoothukudi , George Ponnaya, Kumari Christian, operating manager, arrested
× RELATED குமரியில் டாரஸ் லாரியால் தொடரும் விபத்து