குடியரசுத்தலைவர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமை செயலாளர் ஆலோசனை

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 19ம் தேதி டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசினார். அப்போது, சட்டமன்ற நூற்றாண்டு விழாவை தலைமை தாங்கி நடத்தி வைக்கவும், சட்டப்பேரவையில் கலைஞர் திருவுருவப்படத்தை திறந்து வைக்கவும், சென்னை கடற்கரை சாலையில் அமையவிருக்கக்கூடிய நினைவுத்தூண் அடிக்கல் நாட்டு விழாவை நடத்தி வைக்கவும் அழைப்பு விடுத்தார்.  முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்றுக் கொண்ட குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வரும் ஆகஸ்டு 2ம் தேதி தமிழகம் வருகிறார். அன்றைய தினம், தமிழக சட்டப்பேரவை மண்டபத்தில் கலைஞர் திருவுருவப்படத்தை திறந்து வைக்கிறார்.

மேலும், இந்த விழாவை தமிழக ஆளுநர் தலைமை ஏற்று நடத்த உள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகிக்க உள்ளார். இந்த நிகழ்ச்சிகளை தமிழக சட்டப்பேரவை செயலகத்தின் மூலம் சிறப்பாக நடத்துவதற்கு வேண்டிய பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதேபோல், படத்திறப்பு விழாவில் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கிறார்கள். அரசு சார்பில் எந்தவித பாகுபாடும் இன்றி படத்திறப்பு நிகழ்வில் கலந்துகொள்ள அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.  

இந்தநிலையில், குடியரசுத்தலைவரின் வருகையையொட்டி எடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் தலைமை செயலாளர் இறையன்பு உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில், டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி மற்றும் பல்வேறு அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Related Stories:

>