மீஞ்சூர் அருகே துணிகரம் வடசென்னை அனல்மின் நிலையத்தில் ரூ8 லட்சம் ஜெனரேட்டர் திருட்டு: 2 பேர் கைது; 2 பேருக்கு போலீஸ் வலை

பொன்னேரி: மீஞ்சூர் அருகே உள்ள வடசென்னை அனல்மின் நிலையத்தில் ரூ.8 லட்சம் மதிப்பிலான ஜெனரோட்டரை திருடிச் சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருட்டுக்கு உடந்தையாக இருந்த 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த ஊரணம்பேடு பகுதியில் வட சென்னை அனல்மின் நிலையத்தின் 4வது நிலைய  கட்டுமான பணி நடந்து வருகிறது.  இங்கு விமல் (45) என்பவர் ஒப்பந்ததாரராக பணி செய்து வருகிறார்.  இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இங்கிருந்த ரூ.8 லட்சம் மதிப்பிலான ஜெனரேட்டரை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றுவிட்டனர்.  

இதுகுறித்து  காட்டூர் போலீசில் விமல் புகார் அளித்தார். போலீசார்  வழக்குப்பதிவு செய்த நிலையில்,  குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய  திருவள்ளூர் மாவட்ட எஸ்பி வருண்குமார் உத்தரவிட்டார். இதனையடுத்து,  பொன்னேரி டிஎஸ்பி கல்பனா தத் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன், எஸ்ஐ-க்கள் வினோத்குமார், வேலுமணி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு  தீவிர விசாரணை மேற்கொண்டதில், அத்திப்பட்டு நேரு நகரை சேர்ந்த ஜெயசூர்யா ( 25), அத்திப்பட்டு காந்தி நகரை சேர்ந்த சூர்யா (24) ஆகியோரிடம் ஜெனரேட்டர் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து 2 பேரையும்  கைது செய்த போலீசார்,  அவர்களிடம் இருந்து  ஜெனரேட்டரை பறிமுதல் செய்தனர். மேலும், இந்த திருட்டு சம்பவத்துக்கு  உடந்தையாக இருந்த அத்திப்பட்டு கலைஞர் நகரை சேர்ந்த அமிர்தராஜ் (28),  வினோத் (25) ஆகிய இருவரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: