அழகர்கோவிலில் கொரோனா ஊரடங்கால் ஆடி பவுர்ணமி தேரோட்டம் ரத்து..! கோயில் உட்பிரகாரத்தில் பூப்பல்லக்கு: பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

அலங்காநல்லூர்: அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயிலில் ஆடி பெருந்திருவிழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நடைபெறும். இதில் லட்சக்கணக்கான மக்கள் கூடுவர். ஆனால், கொரோனா ஊரடங்கால் நேற்று நடைபெற வேண்டிய திருத்தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் கோயில் கோட்டைவாசல் முன்பாக உள்ள மதுரை, மேலூர் சாலைகளின் இருபுறமும் கிடாய் வெட்டி, பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து கள்ளழகர் கோயியில், பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோயிலில் நெய் விளக்கேற்றினர். மேலும், சோலைமலை முருகன் கோயிலிலும் பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று மதியம் 2 மணிக்கு மேல் கோயில் நிர்வாகம் அறிவித்தபடி கோட்டை வாசல் மூடப்பட்டு, பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதனால், கோட்டைவாசல் முன் கூடிய பக்தர்கள் சூடம் ஏற்றி தரிசனம் செய்தனர். மாலையில் பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோயிலில் மேளதாளம் முழங்க, தீவட்டி பரிவாரங்களுடன், பூ மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு, கோயில் நிர்வாகம் சார்பில் திருக்கதவுகளுக்கு சந்தனம் சாத்துபடி நடந்தது. இதில் பட்டர்கள், கோயில் பணியாளர்கள் மட்டும் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து வழக்கம்போல் கோயில் உட்பிரகாரத்தில் பூப்பல்லக்கு நிகழ்ச்சி நடந்தது. இதில் கள்ளழகர் என்கின்ற சுந்தரராஜப் பெருமாள் எழுந்தருளி விசேஷ பூஜைகள் நடந்தன. முன்னதாக பவுர்ணமி திருதேரோட்டம் ரத்தானதால், கோயில் உட்பிரகாரத்தில் பரிகார பூஜை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா தலைமையில் கோயில் பணியாளர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.

Related Stories: