×

செய்யாறு அருகே 20 ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்தது திரவுபதியாக மக்கள் வழிபடுவது கி.பி.15ம் நூற்றாண்டு நடுகல்: வரலாற்று ஆய்வாளர் தகவல்

செய்யாறு: செய்யாறு அருகே திரவுபதி அம்மனாக மக்கள் வழிபடுவது கி.பி.15ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் என்று வரலாற்று ஆய்வாளர் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த தென்பூண்டிப்பட்டு கிராம எல்லையில் உள்ள குன்னத்தூர் பாலகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான நிலத்திற்கு அருகே கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கற்சிலை கிடைத்தது. அந்த சிலையை அருகில் வேப்ப மரத்தடியில் உள்ள சிறிய கோயிலில் வைத்து திரவுபதி அம்மனாக மக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் மக்கள் வழிபாட்டில் இருப்பது கி.பி.15ம் நூற்றாண்டு நடுகல் என்று வரலாற்று ஆய்வாளரும், தொல்லியல் ஆர்வலருமான டாக்டர் எறும்பூர் கை.செல்வக்குமார் கண்டறிந்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று கூறியதாவது: விஜயநகர அரசர்கள், நாயக்கர்கள், சோழர்கள், பல்லவ மன்னர்கள் உள்ளிட்ட மன்னர்கள் ஆட்சி செய்து வந்தனர். அந்த காலங்களில் போர்க்களத்தில் வீரமரணம் அடையும் வீரனுக்கு நடுகல் அமைத்து வழிபடுவது வழக்கம். இந்த நடுகற்கள் போர்வீரனின் தியாகத்தை போற்றும் வண்ணம் எழுப்பப்பட்ட நினைவுச் சின்னமாகும். 


தென்பூண்டிப்பட்டு கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளாக திரவுபதி அம்மன் என்று நினைத்து மக்கள் வழிபட்டு வருவது கிபி 14ம் நூற்றாண்டுக்கும் கிபி 15ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட கால கட்டத்தை சேர்ந்த நடுகல்லாக இருக்கும். கற்பலகையில் உள்ள பீடத்தின்மீது நடுவே ஆண் புடைப்புச் சிற்பம் அமைந்துள்ளது. போர்வீரனின் வலது கையில் குறுவாள் ஏந்தி, இடது கையில் கேடயத்துடன் போரிடும் நிலையில் காட்டப்பட்டுள்ளது. தலையில் சரிந்த கொண்டையுடன், பரந்த முகம், அகன்ற நெற்றி, குறுகிய வாய், முறுக்கிய மீசை, எடுப்பான மூக்கு, காதுகள் நீள் செவிகளாகவும் உள்ளன. மேலும் கழுத்தில் மணி வடமும், மார்பில் பதக்கம் நீள் சரம் அலங்கரிக்கிறது. அகன்ற தோள் விரிந்த மார்பு வீரம் வெளிப்பட எடுப்பாக நிற்கிறது. இச்சிலையின் கலை பாணி விஜயநகர காலத்தை ஒத்தவையாக இருந்தாலும், பல்லவர்களின் தலைநகரம் காஞ்சிபுரம் அருகில் உள்ளதால் பல்லவ மன்னர்கள் வழிவந்த விஜய வேந்தன் காலத்தில் நிறுவப்பட்டு இருக்கலாம் என்று கருத வாய்ப்புள்ளது. ஓரத்தில் எழுத்துக்கள் போன்ற வடிவங்கள் காணப்பட்டாலும் முற்றிலும் சேதமாகி உள்ளது. போர் வீரரின் வீரத்தை போற்றும் வகையில் அமைக்கப்பட்ட இந்த நடுகல் இப்பகுதியில் கிடைத்தது அரிதாகவே கருதப்படுகிறது. இதுகுறித்து மேலும் ஆய்வு செய்யப்பட வேண்டியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.



Tags : Seiyaru ,Draupadi , Do, as a liquidator, the centenary implant
× RELATED செய்யாறு அருகே அரசு...