தூத்துக்குடி மாவட்ட மைய நூலகத்தில் கிளை நூலகங்களுக்கு புத்தகங்கள் பிரித்து அனுப்பும் பணி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட மைய நூலகத்திற்கு வந்துள்ள ஒரு லட்சம் புத்தகங்களை கிளை நூலகங்களுக்கு பிரித்து அனுப்பும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா 2ம் அலையை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அரசின் உத்தரவால் அனைத்து நூலகங்களும் மூடப்பட்டது. தற்போது தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில், தமிழகம் முழுவதும் நூலகங்கள் திறந்து செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது. 75 நாட்களுக்கு பிறகு மாவட்ட, கிளை நூலகங்கள் திறக்கப்பட்டு உள்ளதால் வாசகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தூத்துக்குடி டூவிபுரத்தில் மாவட்ட மைய நூலகம் செயல்பட்டு வருகிறது. 

கடந்த 1954ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த நூலகம் 67 ஆண்டுகளை கடந்த நிலையில், இங்கு பல்வேறு பிரிவுகளில் சுமார் 12,77,095 புத்தகங்கள் உள்ளன. நூலகத்தில் 19,213 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். தினமும் 250க்கும் மேற்பட்டவர்கள் நூலகத்திற்கு வந்து செல்கின்றனர். தமிழகம் முழுவதும் நூலகங்களை மேம்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கையின் பலனாக தூத்துக்குடி மாவட்ட மைய நூலகத்திற்கு 574 தமிழ் பதிப்பக புத்தகங்களும், 110 ஆங்கில பதிப்பக புத்தகங்களும் என புதிதாக ஒரு லட்சம் புத்தகங்கள் வந்துள்ளன. 

இந்த புத்தகங்களை மாவட்டத்திலுள்ள 111 கிளை நூலகங்களுக்கு பிரித்து அனுப்பும் பணிகளை நூலக பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட மைய நூலகத்தில் சிவில் சர்வீஸ், நீட் தேர்வு, ஜெஇஇ, டிஎன்பிஎஸ்சி, காவலர் தேர்வு உள்ளிட்ட பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு தேவையான புத்தகங்கள் இருந்தும் அவற்றை படிப்பதற்கு ஏதுவாக அமைதியாக, மனம் ஒன்றி படித்திட அறை இல்லாதது பெரும் குறையாக இருந்து வருகிறது. இதனால், போட்டி தேர்வுகளுக்காக படிக்க வரும் இளைஞர்கள், மாணவ, மாணவியர்கள், வயதானவர்கள் பாதிப்பிற்குள்ளாகின்றனர். நூலக வளாகத்தில் ஏராளமான காலியிடம் உள்ள நிலையில் புத்தகங்களை படிப்பதற்கான அறை வசதியை மாவட்ட நிர்வாகம் செய்து கொடுத்திடவேண்டும் என்று வாசகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories:

>