தொலைநோக்கு திட்டத்தின் மூலம் மறைமலைநகர் நகராட்சி 21 வார்டுகளுக்கு ஒருங்கிணைந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்: வரலட்சுமி மதுசூதனன் எம்ஏல்ஏ உறுதி

செங்கல்பட்டு: மறைமலைநகர் நகராட்சியின்  21 வார்டுகளை சேர்ந்த மக்களிடம், குறைகேட்பு முகாம் மறைமலைநகர் நகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. நகராட்சி ஆணையர் நரேந்திரன் தலைமை வகித்தார். நகர திமுக செயலாளர் ஜெ.சண்முகம், நகராட்சி பொறியாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றார். பொதுமக்கள் சார்பில், அனைத்து பகுதிகளுக்கும் பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்த வேண்டும். நின்னகரை, காட்டாங்கொளத்தூர், தைலாவரம் ஆகிய பகுதிகளில் உள்ள ஏரிகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்.

அனைத்து பகுதியிலும் பாலாற்று குடிநீர் வழங்கவேண்டும். அதிமுக ஆட்சியில் பல கோடி செலவில் போடப்பட்ட ஆர்ஓ வாட்டர் ப்ளாண்ட் ஒன்று கூட இயங்கவில்லை.  வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அப்போது, எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் பேசுகையில், தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்து முதல் இரவு பகல் பாராமல், பொதுமக்களுக்காக பாடுபட்டு பல லட்சம் கோரிக்கை மனுக்களுக்கு உடனடி தீர்வு கண்டுள்ளார். அதே போன்று எங்களையும், பொதுமக்களின் குறைகளை கேட்டு அதனை உடனடியாக தீர்க்க உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி செங்கல்பட்டு தொகுதி முழுவதும், பொதுமக்களின் குறைகளை கேட்டு, அதனை தீர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய உத்தரவு பிரபித்துள்ளேன். செங்கல்பட்டு மாவட்டத்தில் மிக வேகமாக வளர்ந்துவரும் பகுதியாக மறைமலைநகர் நகராட்சி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக, நகர வளர்ச்சிக்காக எதையும் செய்யவில்லை. மற்ற பகுதிகளான செங்குன்றம், தைலாவரம், கடம்பூர், களிவந்தப்பட்டு, திருக்ச்சூர், பேரமனூர், சட்டமங்கலம், காட்டூர், சித்தமனூர், காந்தி நகர், காட்டாங்கொளத்தூர், பொத்தேரி ஆகிய பகுதிகள் இன்றும் வளர்சியடையாமல் கிராமமாகவே உள்ளது. இந்த பகுதிகளுக்கு தேவையான பாதாள சாக்கடை திட்டம், சாலை, குடிநீர் என அடிப்படை வசதிகளை முதலில் மேம்படுத்த வேண்டும்.

இதற்காக எனது தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் போதிய வசதிகளை அரசிடம் கேட்டு நிச்சயம் நிறைவேற்றப்படும்.நகரின் அனைத்து பகுதிகளும் ஒருங்கிணைந்து வளர்ச்சியடைய அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும் தொழிற்சாலை மற்றும் வீட்டு கழிவுகள், சுத்திகரிக்கப்படாமல் நகரில் உள்ள முக்கிய ஏரிகளில் கலக்கிறது. இதனால், நிலத்தடி பாதிக்கப்படுகிறது. இதனை தடுக்க தொலைநோக்கு திட்டத்தின் மூலம்  நகரில் பெரிய அளவில் ஒருங்கிணைந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். நகரின் 21 வார்டுகளுக்கும் சுத்திகரிக்கப்பட்ட பாலாற்று குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.  பொதுமக்கள் எந்நேரமும் என்னை தொடர்புகொண்டு குறைகளை கூறலாம்.

மாதத்தில் 2 நாட்கள் நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்க உள்ளேன். நகரில் இயங்காமல் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பழுது பார்க்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். புகார் மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி, குறைகள் நிவர்த்தி செய்யப்படும்.’’ என்றார். இதில், திமுக நகர துணை செயலாளர் சீனுவாசன், முத்து, சுப்பிரமணி, அரங்ககிரி சந்திரன், கமலக்கண்ணன், ஆல்பட், முருகேசன், சுரேஷ்குமார், நித்யானந்தம், பார்த்தசாரதி, நகராட்சி அலுவலர்கள் செண்பகம், தாமோதரன், செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: