×

மதுராந்தகம் ஒன்றியம் அரியனூர் ஊராட்சியில் புதர் மண்டி கிடக்கும் ஏரி: விவசாயிகள் வேதனை

செய்யூர்: மதுராந்தகம் ஒன்றியம் அரியனூர் ஊராட்சியில் புதர் மண்டிக் கிடக்கும் ஏரியை சீரமைத்து, தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மதுராந்தகம் ஒன்றியம் அரியனூர் ஊராட்சியில், சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியில் இருந்து சுமார் 250 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. விவசாயிகள் சிலர், இந்த ஏரியின் நீர் பாசனத்தை மட்டுமே நம்பி விவசாயம் செய்கின்றனர். இந்த ஏரியை, பொதுப்பணி துறையினர், முறையாக ஏரி தூர்வாரி சீரமைக்காமல் கிடப்பில் போட்டுள்ளதால், ஏரி முழுவதும் கோரை மற்றும் காட்டாமணி செடிகள் வளர்ந்து, புதர்போல் மண்டிக் கிடக்கிறது. செடி, கொடிகள் ஏரி முழுவதும் நிறைந்து காணப்படுவதால், ஏரியில் மழைநீர் கொள்ளளவு குறைந்து வீணாக கலங்கள் வழியாக வெளியேறுகிறது.

இதனால், ஏரிக்கு தேவையான நீர் இருப்பு இல்லாமல் போவதாகவும், நிலத்தடி நீர் சேமிக்க முடியாமல் போவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர். கடந்த ஆண்டுக்கு முன் இந்த ஏரியில் உள்ள மதகுகள், கலங்கல்கள், கரைகள் சிரமைக்கப்பட்டன. ஆனால், ஏரியில் உள்ள செடிகள் அகற்றுவது மற்றும் ஏரியை ஆழப்படுத்தும் ஆகிய முக்கிய பணிகள் மேற்கொள்ளவில்லை. இதனை அப்போதே முறையாக செய்தி செய்திருந்தால், தற்போது பெய்து வரும் மழைக்கு, இந்த ஏரியில் நீர் கொள்ளளவு அதிகரித்து இருக்கும். அதன் மூலம் 2 போகம் விவசாயம் செய்து இருக்கலாம் என விவசாயிகள் வேதனையடன் கூறுகின்றனர்.

எனவே, விவசாயிகள் நலன் கருதி இந்த ஏரியில் உள்ள செடி, கொடிகளை அகற்றி ஏரியை ஆழப்படுத்த, பொதுப்பணி துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘இந்த ஏரியை நம்பி ஒரு போகம் மட்டுமே விவசாயம் செய்ய முடிகிறது. 2வது போகம் விவசாய சாகுபடிக்கு மோட்டார் பம்ப் வைத்திருப்பவர்கள் மட்டுமே பயிரிடுகின்றனர். ஏரி பாசனத்தை மட்டுமே நம்பியுள்ள நாஙகள், 2வது போகம் பயிரிட ஏரியில் போதுமான நீர் இருப்பு எப்போதும் இருந்ததே இல்லை. ஏரியை தூர்வாரி ஆழப்படுத்தி, கோரை புற்கள், வெத்தல காட்டாமணி ஆகியவற்றை அகற்றவேண்டும்.

விவசாயிகள் நலன் கருதி செடிகளை அகற்றியும், ஏரியை ஆழப்படுத்தியும் கொடுத்தால் ஏரியை மட்டுமே நம்பியுள்ள நாங்கள், 2 போகம் விவசாயம் செய்ய முடியும். தற்போது ஏரியில் நீர் இல்லாமல் இருப்பதை கலெக்டர் நேரில் வந்து ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : Madurantakam ,Union Budar Mandi Lake ,Ariyanur Panchayat , Madurantakam, Panchayat, Shrub, Lake, Farmers
× RELATED லாரி மீது தனியார் பேருந்து உரசியதால் 4...