விழிப்புணர்வு கண்காணிப்பு குழு திருத்தி அமைப்பு: நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வருக்கு, திருமாவளவன் பாராட்டு

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி மாநில அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழுவை தமிழ்நாடு அரசு திருத்தியமைத்துள்ளது. முதல்வரின் தலைமையிலான அக்குழுவில் தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தக் குழு ஆண்டுக்கு இருமுறை முதல்வர் தலைமையில் கூடி ஆய்வு மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் கட்சியின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றியதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எங்களது நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த அதிமுக ஆட்சியின்போது இந்த குழு முறையாகக் கூட்டப்படவில்லை. அதிமுக ஆட்சியின் பாராமுகத்தால் தான் ஆதிதிராவிட மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்தன. இந்தியாவிலேயே ஆதிதிராவிட மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிக அளவில் நடக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு மாறியது. அதுபோல அதிமுக ஆட்சியின்போது, ஆதிதிராவிட பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளிலும் தமிழ்நாடு முன்னணி வகித்தது. 2017ம் ஆண்டில் மட்டும் 55 தலித் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

இப்போதைய ஆட்சியில் இந்த நிலை மாற்றப்படும் என்று நம்புகிறோம். விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு தற்போது முற்றிலுமாகத் திருத்தி அமைக்கப்பட்டிருப்பது மட்டுமின்றி அது முனைப்பாக செயல்படுவதற்கான வழிகாட்டுதல்களும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் இடம்பெற்றுள்ளன.  இதைப்போலவே, மாவட்ட அளவிலான குழுக்களும் திருத்தி அமைக்கப்படுவதோடு அதை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆண்டுக்கு 4 முறை கூட்டி ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>