ஊழல் குற்றச்சாட்டால் ஒப்பந்தம் முறிவு கோவாக்சின் சோதனைக்கு பிரேசிலில் அனுமதி ரத்து

ஐதராபாத்: பாரத் பயோடெக் நிறுவனம் பிரேசிலில் உள்ள தனது கூட்டு நிறுவனம் உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்ததை தொடர்ந்து, கோவாக்சின் தடுப்பூசி மருத்துவ பரிசோதனைக்கு அளிக்கப்பட்டு இருந்த அனுமதியை பிரேசில் அரசு ரத்து செய்துள்ளது. பிரேசில் நாட்டில் உள்ள பிரெசிசா மெடிகமன்டோஸ் மற்றும் என்விக்சியா பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்துக்கு, 2 கோடி கோவாக்சின் தடுப்பூசியை வினியோகம் செய்ய, ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கடந்த பிப்ரவரி 26ம் தேதி ஒப்பந்தம் செய்தது. இதில், ஊழல் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, பாரத் பயோடெக் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை பிரேசில் அரசு ரத்து செய்தது.

இதனால், அதிருப்தியில் இருந்த பாரத் பயோடெக் நிறுவனம், பிரேசிலின் பிரெசிசா மெடிகமன்டோஸ் மற்றும் என்விக்சியா பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்துடன் செய்திருந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நேற்று முன்தினம் இ-மெயில் மூலமாக ரத்து செய்தது. இந்நிலையில், பிரேசில் நாட்டின் மருந்து கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை அமைப்பான அன்விசா, நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘பிரெசிசா மெடிகமன்டோஸ் மற்றும் என்விக்சியா பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதால், பிரேசிலில் கோவாக்சின் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைக்கான அனுமதி ரத்து செய்யப்படுகிறது’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>