×

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 30,000 கனஅடி

மேட்டூர்: கர்நாடக மாநிலத்தில் கனமழை எதிரொலியாக, அங்குள்ளஅணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை கபினி அணையில் இருந்து உபரிநீர் 30,800 கனஅடி வீதம் காவிரியில் வெளியேற்றப்படுகிறது. அதேபோல்,கிருஷ்ணராஜசாகர் அணையில் நீர்வரத்து, நேற்று காலை 30,776 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து 6,419 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்பட்ட 37,000 கனஅடி உபரிநீர், நேற்று நண்பகல் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது. அங்கிருந்து மதியம் ஒகேனக்கல் வந்து சேர்ந்தது.

இதனால், ஒகேனக்கல் காவிரியில் நேற்று காலை 8 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து இரவு 7 மணியளவில் விநாடிக்கு 30 ஆயிரம் கனஅடியானது. இதனால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அங்கிருந்து நேற்றிரவு மேட்டூர் அணையை தண்ணீர் வந்தடைந்தது. இதனால், நேற்று காலை 6,841 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இரவு 7 மணிக்கு 15,000 கனஅடியாக அதிகரித்தது. அப்போது, அணையின் நீர்மட்டம் 72.57 அடியாக இருந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 12,000 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.


Tags : Okenegal , Okanagan, aquifer, cubic feet
× RELATED ஒகேனக்கல் செல்ல அனுமதி மறுத்ததால்...