×

சாட்சி பாதுகாப்பு நிலைக்குழு மாவட்டந்தோறும் உள்ளதா?...அறிக்கையளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: சாட்சி பாதுகாப்பிற்கான நிலைக்குழு மாவட்டந்தோறும் உள்ளதா என்பது குறித்து பதிவுத்துறை தரப்பில் அறிக்கையளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. ஒரு கொலை வழக்கின் சாட்சியை மிரட்டிய வழக்கில் தேனி மாவட்டம், உத்தமபாளையத்தை சேர்ந்த சொக்கர், போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கேட்டு சொக்கர், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.சந்திரசேகரன் பிறப்பித்த உத்தரவு:  ஒரு வக்கீல் கொலை செய்யப்பட்டுள்ளார். அதில், சில வக்கீல்கள் கைதாகி ஜாமீன் பெற்றுள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக முக்கிய சாட்சியை சிலர் மிரட்டியுள்ளனர். இவ்வழக்கில் ஏற்கனவே சிலருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய வேண்டுமென ஒரு இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதே நேரம் பாதிக்கப்பட்டோர் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளனர். தேனி மாவட்ட நீதிமன்றமும் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது. ஆனால், சாட்சிகளின் பாதுகாப்பை உரிய அதிகாரிகள் கண்காணிக்கின்றனரா என்பதை பார்க்க வேண்டியுள்ளது. சாட்சிகள் பாதுகாப்பு திட்டம் இந்த வழக்கில் பாதிக்கப்பட்டோருக்கும் பொருந்தும். ஆனால், அது கிடைத்ததா என்பது தெரியவேண்டும். இந்த திட்டம் முறையாக நிறைவேற்றப்படவில்லை என்பது தெரிகிறது. எனவே, தமிழகத்தில் சாட்சிகள் பாதுகாப்பு நிலைக்குழு மாவட்டந்தோறும் ஏற்படுத்தப்பட்டுள்ளதா? மாவட்டந்தோறும் சாட்சிகள் பாதுகாப்பு திட்ட நிதி உருவாக்கப்பட்டுள்ளதா? சாட்சிகள் பாதுகாப்பு பிரிவு செயல்படுகிறதா? பாதிக்கப்பட்டவரின் சாட்சியத்தை பதிவு செய்வதற்கான தனி அறை வசதி நீதிமன்றத்தில் உள்ளதா என்பது குறித்து, பதிவுத்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூலை 27க்கு தள்ளி வைத்தார்.

Tags : Icord , Witness, Security Standing Committee, Report, Icord Branch
× RELATED நெல்லையில் ஆசிரியருக்கு பணி ஒப்புதல்...