×

மோடி, அமித்ஷா பற்றி அவதூறாக பேசியதாக வழக்கு குமரி பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது: பாளை மத்திய சிறையில் அடைப்பு

களியக்காவிளை: அவதூறு பேச்சு வழக்கில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது செய்யப்பட்டு, குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். குமரி மாவட்டம் அருமனை வட்டார கிறிஸ்தவ இயக்கம் சார்பில் கடந்த 18ம்தேதி அருமனையில் நடந்த கூட்டத்தில்  ஜனநாயக கிறிஸ்தவ பேரவை தலைவரும், பாதிரியாருமான ஜார்ஜ் பொன்னையா பேசியது சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையானது. இதில் மாற்று மதத்தை இழிவுப்படுத்தும் வகையில் பேசியதுடன், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாகர்கோவில் பா.ஜ. எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி ஆகியோரை அவதூறாக பேசியதாக பல்வேறு  அமைப்புகள் மற்றும் பாஜவினர் புகார் அளித்தனர்.

இதையடுத்து கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த அருமனை வட்டார கிறிஸ்தவ இயக்க செயலாளர் ஸ்டீபன் உள்ளிட்டோர் மீது அவதூறாக பேசுதல், மத உணர்வை ெகாச்சைப்படுத்துதல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக ஜார்ஜ் பொன்னையா வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, மதுரை செல்வதாக எஸ்.பி. பாஸ்கரனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்டம் முழுவதும்  போலீசார் வாகன சோதனை நடத்தினர். மதுரை ஒத்தக்கடையில் அவரது காரை போலீசார் வழிமறித்தனர். ஆனால் கார் நிற்காமல் சென்றது. இதையடுத்து மதுரை ரிங் ரோட்டில் ஜார்ஜ் பொன்னையா சென்ற காரை போலீசார் மடக்கி, அவரை கைது செய்தனர். பின்னர் தனிப்படையிடம் ஜார்ஜ் பொன்னையா ஒப்படைக்கப்பட்டார்.

இதையடுத்து நேற்று காலை 11 மணியளவில் குமரி மாவட்ட போலீசாரிடம் ஜார்ஜ் ெபான்னையா ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் விசாரணை நடந்தது. குழித்துறை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் அவரை குழித்துறை நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் செல்வம் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவர், பாதிரியார் ஜார்ஜ் ெபான்னையாவை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து பாளை மத்திய சிறையில் நேற்று மாலை அவர் அடைக்கப்பட்டார். பின்னர் உடல் நலக்குறைவு காரணமாக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Tags : Kumari priest ,George Ponnaya ,Modi ,Amit Shah ,Palai Central Jail , Modi, Amit Shah, case, Kumari priest, George Ponnaya, Pali Central Jail
× RELATED பிரதமர் மோடியின் பேச்சுக்காக...