×

தடகள வீராங்கனைக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பயிற்சியாளரை குண்டர் சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தடகள வீராங்கனைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைதான பயிற்சியாளர் நாகராஜனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து அவரது மனைவி தாக்கல் செய்த மனுவுக்கு 4 வாரங்களில் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சென்னை நந்தனத்தை சேர்ந்தவர் நாகராஜன். பிராட்வேயில் தடகள பயிற்சி அகாடமி நடத்தி வரும் இவர், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தடகள வீராங்கனை ஒருவர், சென்னை பூக்கடை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், நாகராஜன் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில்  வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் நாகராஜனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்த உத்தரவை ரத்து செய்து, அவரை விடுதலை செய்யக் கோரி அவரது மனைவி கிரேஸ் ஹெலினா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், எந்த காரணங்களும் இல்லாமல் நாகராஜனை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க பிறப்பித்த உத்தரவுகள் குறித்த ஆவணங்கள் தெளிவாக வழங்கப்படவில்லை. ஒரு வழக்கில் மட்டுமே சம்மந்தப்பட்டுள்ளதால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தது சட்டவிரோதமாகும்.  

இச்சம்பவம் 2013 முதல் 2020வரையிலான காலக்கட்டத்தில் நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ள நிலையில், இப்போது குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க எந்த அவசியமும் இல்லை என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் பொங்கியப்பன் அடங்கிய அமர்வு, மனுவுக்கு 4 வாரங்களில் பதிலளிக்குமாறு தமிழக உள்துறை செயலாளர், போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு உத்தரவிட்டது.

Tags : Tamil Nadu government , Athlete, sexual harassment, coach, thug law, Tamil Nadu government
× RELATED தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்...