×

தொடர் விலையேற்றத்தால் மனம் நொந்து பெட்ரோல் பங்க்கில் மோடியின் படத்தை கும்பிட்டு புகைப்படம் எடுக்கும் வாகன ஓட்டிகள்: சமூக வலைதளங்களில் வைரல்

ெசன்னை: தொடர் விலையேற்றத்தால் மனம் நொந்த வாலிபர்கள் சிலர், பெட்ரோல் பங்க்குகளில் உள்ள பிரதமர் மோடியின் படத்தை பார்த்து கும்பிட்டு, புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் போடுவது வைரலாகி வருகிறது. பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கடந்த மாதம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் விலை சதம் அடித்தது. அதற்கு போட்டியாக டீசல் விலையும் போட்டி, போட்டு உயர்ந்து கொண்டிருக்கிறது. சொல்லப் போனால் டீசல் விலை பெட்ரோல் விலைக்கு வந்து விட்டது. வித்தியாசமே வெறும் 6 ரூபாய் தான். அந்த அளவுக்கு விலை உயர்ந்துள்ளது. இந்த விலையேற்றத்தால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தங்களின் வருவாயில் பாதியை பெட்ரோல், டீசலுக்கே பயன்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளதாக அனைவரும் குமுறி வருகின்றனர். ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த நேரத்தில் எரிபொருட்களின் விலை உயர்வு அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் ஏற்றத்துக்கு மேலும் வழிவகுக்கும் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர். தேர்தல் நேரத்தில் பெட்ேரால், டீசல் விலை ஏறுவதில்லை. ஆனால் கச்சா எண்ணெய் விலை உயராத நேரத்தில் பெட்ரோல், டீசல் விலை மட்டும் ஏறுவதில் எந்தவிதத்தில் நியாயம் என்று பொதுமக்கள், அரசியல் கட்சியினர் ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர். எனவே, விலையேற்றத்தை குறைக்க வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இதை ஒன்றிய அரசு கண்டுகொண்டதாக தெரியவில்லை. பெட்ரோல், டீசல் விலை தினம், தினம் உயர்ந்து தான் வருகிறது. சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.49காசுக்கு விற்கப்பட்டது. டீசல் ரூ.94.39 காசுக்கு விற்கப்பட்டது. முன்னெப்போதும் இல்லாத வகையில் விலை ஏற்றத்தால் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் அரசு பேருந்து, ரயில்களில் தங்களது பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தை கலாய்க்கும் வகையில், மீம்ஸ்கள் கிரியேட்டர்கள் மீம்ஸ்களையும் தெறிக்க விட்டு வருகின்றனர். மீம்ஸ்களில், ‘பெட்ரோல் பங்க்ல 3 லிட்டர் பெட்ரோல் தாம்பா போட்டேன்...

அத பார்த்துட்டிருந்த ஒரு வீட்டு புரோக்கர் ஈசிஆர்ல ஒன்னரை கோடிக்கு பங்களா இருக்கு பார்க்குறீங்களான்னு கேட்கிறார்ப்பா... நான் அப்படியே ஷாக்காயிட்டேன்,’ என்ற மீம்ஸ் பிரபலமடைந்துள்ளது. இதேபோல், பெட்ரோல் பங்க் வர்ரவங்க எல்லாரும் ராஜ பரம்பரையை சேர்ந்தவங்க... என்ற மீம்சும், ரூ.30க்கு பெட்ரோல் போடுங்கண்ணே என பாட்டிலை நீட்டுபவரிடம், பாட்டிலை நீயே வச்சிக்கே. மூடிய மட்டும் கொடு... என்ற மீம்சும், பேசாம சைக்கிள் விலையேற்றத்துக்கு முன்னாடி ஒரு சைக்கிள் வாங்கி வச்சரலாம் போல... என்ற மீம்சும், ரூ.10 ரூபாய்க்கு டீ சாப்பிட போகனும்னா கூட 100 ரூபாய்க்கு பெட்ரோல் போடனும் போல... உள்ளிட்ட மீம்ஸ்கள் வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர் போன்றவற்றில் வலம் வர தொடங்கியுள்ளது.

இதனை தற்போது முறியடிக்கும் வகையில், பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல் போடும் இளைஞர்கள் சிலர், அங்கிருக்கும் விளம்பர பேனரில் உள்ள பிரதமர் மோடியின் படத்தை பார்த்து, ‘பெட்ரோல், டீசல் விலையை எப்படியாவது குறைங்க... என கும்மிட்டு, அதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இதற்கு பல்வேறு விதமான கமெண்்டுகளும் வரவும் தொடங்கியுள்ளது.

Tags : Modi , Serial pricing, petrol punk, Modi, Photo
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...