×

கொரோனா பரவலால் மூடப்பட்டிருந்த பொது நூலகங்கள் மீண்டும் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை: தமிழக அரசின் உத்தரவின் பேரில், தமிழகம் முழுவதும் மூடப்பட்டிருந்த பொது நூலகங்கள் நேற்று முதல் மீண்டும் திறக்கப்பட்டன.  கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் செயல்படும் நூலகங்களை தவிர்த்து பொது நூலகத் துறையின் கீழ் செயல்படும் மற்ற நூலகங்கள் ஜூலை 24ம் தேதி முதல் திறக்கப்படும் என பொது நூலக இயக்குனர் உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பேரில் நேற்று முதல் பொது நூலகங்கள் மீண்டும் திறக்கப்பட்டன.  

இந்நிலையில், பொது நூலக இயக்குனர் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்:  
* தினந்தோறும் நூலகங்களை மூடுவதற்கு முன்பு வாசகர்கள் பயன்படுத்திய இருக்கைகள், மேசைகள், நாற்காலிகள், நூல்கள் மற்றும் தொடர்புடைய இடங்களை கிருமி நாசினி கொண்டு முழுமையாக தூய்மைப்படுத்த வேண்டும்.
* கட்டுப்பாட்டு மண்டலங்களில் இருந்து வரும் வாசகர்கள் நூலகத்தை பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது. 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், பல்வேறு நோய்வாய்பட்டவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் 15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை நூலகத்தை பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது.
* நூலகத்திற்கு வரும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். நூலகத்தின் நுழைவாயிலில் சோப் அல்லது கிருமி நாசினி வைத்திருக்க வேண்டும். வெப்ப அளவீட்டு சோதனை செய்ய வேண்டும். 6 அடி இடைவெளியுடன் தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும்.
* நூலகங்களுக்கு அருகாமையில் அமைந்துள்ள மருத்துவமனைகள், சிகிச்சை மையங்களை கண்டறிந்து அதற்கான விவரங்களை பட்டியலிட்டு நூலகத்தில் தயார் நிலையில் வைக்க வேண்டும். வாசர்கள் நூல்களை திரும்ப ஒப்படைக்கும் போது அவற்றை தனியே சேகரித்து கிருமி நாசினி கொண்டு முழுமையாக சுத்தப்படுத்த வேண்டும்.
* நூல்கள் வழங்கும் பிரிவில் வாசகர்களின் பார்வைக்கு வைக்கப்படும் நூல்களை தினமும் மாற்ற வேண்டும். இந்த நடைமுறைகளை மிகுந்த கவனத்துடன் பின்பற்றி நூலகங்களை செயல்படுத்துவது சம்பந்தப்பட்ட தலைமை நூலகரது பொறுப்பாகும்.

Tags : Corona , Corona, Public Library, Guideline Protocol
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...