ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் 108 சவரன் மோசடி: தனியார் நிதி நிறுவன மேலாளருக்கு வலை

தண்டையார்பேட்டை: சென்னை ராயபுரம் ஜீவரத்தினம் சாலை பகுதியை சேர்ந்தவர் ஆல்வின் (67). தனியார் பள்ளியில் ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். இவர், ராயபுரம் எஸ்.என்.செட்டி தெரு பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் நகைகளை அடகு வைத்து பணம் பெறுவது வழக்கம். அப்போது, நிதி நிறுவன மேலாளர் பொன்னுசாமிக்கும், ஆல்வினுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்போது, ‘என்னிடம் 108 பவுன் நகைகள் உள்ளது. அதை லாக்கரில் வைக்க வேண்டும்’ என்று ஆல்வின் கூறியுள்ளார். அதற்கு பொன்னுசாமி சம்மதித்துள்ளார். அப்போது, ‘எங்கள் நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர்களின் நகைகளை லாக்கரில் வைக்க பணம் பெறுவதில்லை’ என கூறியுள்ளார். அதன்படி 2019ம் ஆண்டு 108 பவுன் நகைகளை ஆல்வின் கொடுத்துள்ளார்.

நகைகளை வைக்கும் லாக்கர் சாவி ஒன்று மேலாளரிடமும் மற்றொன்று உரிமையாளரிடம் கொடுப்பது வழக்கம். ஆனால், ஆல்வினிடம் லாக்கர் சாவி கொடுக்கப்படவில்லை. கடந்த 10ம் தேதி லாக்கரில் வைக்கப்பட்டுள்ள நகைகளை எடுக்க நிதி நிறுவனத்துக்கு ஆல்வின் வந்துள்ளார். பின்னர், மேலாளர் பொன்னுசாமி குறித்து விசாரித்தபோது, அவர் பதவி உயர்வு பெற்று வேறு இடத்துக்கு சென்றுவிட்டதாக அங்குள்ள ஊழியர்கள் கூறினர். இதனால் அதிர்ச்சியடைந்த ஆல்வின், நிதி நிறுவன லாக்கரை திறந்து காட்டும்படி கூறினார். லாக்கரை திறந்து பார்த்தபோது 108 பவுன் நகைகளும் மாயமானது தெரியவந்தது. விசாரித்தபோது ஆல்வினின் 108 பவுன் நகைகளை பிரித்து 10 பேர் கணக்கில் அதே நிதி நிறுவனத்தில் ரூ.29 லட்சத்துக்கு அடகு வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து நிதி நிறுவன கிளை மேலாளர் சவுந்தர்ராஜனிடம் ஆல்வின் புகார் செய்தார். அவரும் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து, காசிமேடு போலீசில் ஆல்வின் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது, பொன்னுசாமியும், புதுவண்ணாரப்பேட்டை நாகூரார் தோட்டம் பகுதியை சேர்ந்த துப்புரவு தொழிலாளி லதாவும் (42) சேர்ந்து மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories:

>