பாலியல் புகாரில் சிறையில் அடைக்கப்பட்ட சிவசங்கர் பாபாவுக்கு திடீர் நெஞ்சுவலி ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி: மருத்துவர்கள் தீவிர சிகிச்சை

சென்னை: பாலியல் புகாரில் சிறையில் அடைக்கப்பட்ட சிவசங்கர் பாபாவிற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை அடுத்த கேளம்பாக்கம்  சுசில்ஹரி  பள்ளியின் தாளாளர் சிவசங்கர் பாபா மீது மாணவிகள் அளித்த பாலியல்   புகாரையடுத்து, அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு   செய்யப்பட்டது. இந்த வழக்கு சிபிசிஐடி மாற்றப்பட்டது. பின்னர் சிபிசிஐடி   போலீசார் டெல்லியில் பதுங்கி இருந்த சிவசங்கர் பாபாவை கைது செய்து   சென்னைக்கு அழைத்து வந்து செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, செங்கல்பட்டு மாவட்ட சிறையில் 15 நாள் நீதிமன்ற காவலில் அடைத்தனர்.

அவரை 3   நாள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில்   மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. மேலும் அவருக்கு ஆதரவாக செயல்பட்டதாக, பள்ளியின் ஆசிரியைகள் மற்றும் ஊழியர்களும் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இந்நிலையில் சிறையிலிருந்த சிவசங்கர் பாபாவிற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து நேற்று அவரை போலீசார் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் அவரது உடல்நிலை குறித்து 2 நாட்களுக்கு பிறகு தான் கூறமுடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஏற்கனவே சிவசங்கர் பாபாவிற்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இரண்டாவது முறையாக இதயகோளாறு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories:

>