தனி நபர் பெயரில் உள்ள கோயில் சொத்து பட்டாக்களை பெயர் மாற்றம் செய்யும் பணி தீவிரம்: அறநிலையத்துறை அதிகாரி தகவல்

சென்னை: தனி நபர் பெயர்களில் உள்ள கோயில் சொத்துக்களின் பட்டாக்களை பெயர் மாற்றம் செய்வதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 44 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இக்கோயிலுக்கு சொந்தமாக  லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன. இவற்றில், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலங்களை கண்டறிந்து மீட்கும் பணியில் அறநிலையத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தனி நபர் பெயரில் உள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களின் பட்டாக்களை கோயிலின் பெயரில் மாற்றம் செய்ய கோரி வருவாய்த்துறையிடம் அறநிலையத்துறை அதிகாரிகள் பல ஆண்டுகளாக மனுக்களை அளித்து வருகின்றனர்.

இருப்பினும், பணிச்சுமை காரணமாக வருவாய் துறை சார்பில், மேற்கண்ட மனுக்களுக்கு தீர்வு காணப்படாமல் இருந்தது. தற்போது, திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, தனிநபர் பெயரில் உள்ள கோயிலுக்கு சொந்தமான சொத்துகளின் பட்டாக்களை கோயிலின் பெயரில் மாற்றம் செய்வதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அறநிலையத்துறை அதிகாரிகள் அளித்த மனுக்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க  அறநிலையத்துறையின் சார்பில் நில நிர்வாக துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. நில நிர்வாக துறையின் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட போது அறநிலையத்துறை அதிகாரிகள் அளித்ததாக கூறும் மனுக்களுக்கும், வருவாய் துறையிடம் உள்ள மனுக்களின் எண்ணிக்கையிலும் வேறுபாடு இருந்தது.

குறிப்பாக 26 ஆயிரம் மனுக்களில் 14 ஆயிரம் மனுக்களின் எண்ணிக்கையில் வேறுபாடு இருப்பதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் அண்மையில் வருவாய் துறை, அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு கூட்டங்களை நடத்தினர். இக்கூட்டத்தில், அறநிலையத்துறை அதிகாரிகள் அளித்த மனுக்களின் எண்ணிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது என்று அறநிலையத்துறை அதிகாரி தெரிவித்தார். ஒரு சில மாதங்களில் மனுக்கள் மீது விசாரணை நடத்தி ஆவணங்களின் அடிப்படையில் கோயில்களின் சொந்தமான சொத்து என்பதை உறுதி செய்த பிறகு, கோயில்களின் பெயரில் பட்டாக்களை மாற்றம் செய்ய உள்ளனர். இதன் மூலம், விரைவாக தனிநபர் பெயரில் உள்ள கோயில் சொத்துகள், கோயில் பெயர்களில் பட்டா மாற்றம் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

Related Stories:

>